Also Watch
Read this
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமைக்கு கட்டுப்பட்டு வேலை செய்ய முடியவில்லை என்றால் மாவட்ட செயலாளர்கள் தாமாக முன் வந்து விலகிக் கொள்ளலாம் என கூறி அதிர்ச்சி கொடுத்தார். கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், தோல்விக்கு காரணமான மாவட்ட செயலாளர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்கிறது அண்ணா அறிவாலய வட்டாரம்.

59 இடங்களில் திமுக வெற்றி
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், முக்கிய புள்ளிகள் பலரும் தோல்வி அடைந்தனர். கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த முறை அங்கு தோல்வியை தழுவினார். மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என காத்திருந்த திமுகவுக்கு, 2026 தேர்தல் கொடுத்த தோல்வி, சறுக்கலாக பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. ஒட்டு மொத்த மாவட்ட செயலாளர்களும் ஆஜராக, கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய விஷயங்கள் தான் கவனிக்க வைத்துள்ளது.

தோல்விக்கு நானே பொறுப்பு
1991ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி உரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருந்து தோற்ற போதெல்லாம் மிக குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றிருக்கிறோம் எனவும், ஆனால் தற்போது 59 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார். தோல்விக்கு காரணமாக யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பவில்லை எனவும், தோல்விக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் எனவும் கூறினார்.

20 நாட்களில் அறிக்கை
தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க உள்ளதாக அறிவித்த மு.க.ஸ்டாலின், தொகுதி வாரியாக அனைத்து தரப்பு நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு 20 நாட்களுக்குள் அறிக்கை கொடுக்க உத்தரவிட்டு இருப்பதாக கூறினார். திமுகவில் அமைப்பு ரீதியாக மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூற, கூடியிருந்த மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு நொடி ஜெர்க் ஆகி விட்டது என்கிறார்கள். ஏற்கெனவே, தேர்தலுக்கு முன்பே வெற்றியை நழுவ விடும் மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்த நிலையில், புதிய மாற்றத்திற்கு நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும், அதில் யாருக்கும் விதி விலக்கு இல்லை எனவும் மு.க.ஸ்டாலின் பொடி வைத்து கூறியிருக்கிறார்.

போட்டிக்கு போட்டியாக...
மொத்தத்தில் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அடுத்த 5 ஆண்டுக்கு எதிர்க்கட்சியாக திமுக எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் புளூ பிரிண்ட் தயார் செய்யும் கூட்டமாகவே இருந்தது. சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் எப்படி தரவுகளுடன் பேச வேண்டும்? ஆளுங்கட்சியான தவெகவை என்னென்ன விஷயங்களில் கேள்வி கேட்க வேண்டும்? என்ற ஆலோசனையும் கொடுக்கப்பட்டுள்ளது. தவெகவின் வளர்ச்சிக்கு சமூக வலை தளத்தின் ஆதிக்கமும் காரணம் என நம்பும் திமுக தலைமை, திமுகவினரும் போட்டிக்கு போட்டியாக எப்படியெல்லாம் சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற யோசனையும் கொடுக்கப்பட்டுள்ளது.

விலகிக் கொள்ளலாம்...
அதுமட்டுமல்லாமல், அரசியலுக்கு வந்த 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்திருக்கும் தவெகவை எதிர்கொள்ளும் வகையில் கவனமாக செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இனிமேலாவது கோஷ்டி மோதலை கை விட்டு கட்சி பணியில் கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்களை கேட்டுக் கொண்டார். அதுமட்டுமல்லாமல், தலைமை சொல்லும் பணிகளை செய்து முடிக்க முடியாத மாவட்ட செயலாளர்கள் தாமாக முன் வந்து விலகிக் கொள்ளலாம் எனவும் நிர்வாகிகளுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved