news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் வீழும் அதிமுக?
tv

Also Watch

tv

Read this

எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் வீழும் அதிமுக?

நீக்கமும் பதவி பறிப்பும் தீர்வாகுமா?

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்ததை அடுத்து அதிமுக துண்டு துண்டாக சிதறிய நிலையில், விஜய்க்கு ஆதரவாக நின்ற எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் கட்சி பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. அதிருப்தி நிர்வாகிகளை கையாள்வதில் ஆரம்பத்தில் இருந்தே தவற விடும் எடப்பாடி பழனிசாமி, எதற்கெடுத்தாலும் டிஸ்மிஸ், பதவி பறிப்பு என ஆக்சன் எடுப்பது, கட்சியை கபளீகரம் செய்து விடும் என ரத்தத்தின் ரத்தங்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியும் காரணம்
தமிழகத்தை அதிக முறை ஆட்சி செய்த கட்சி என்ற அடையாளம் கொண்டது அதிமுக. வழக்கமாக அதிமுகவுக்கு பல சோதனைகள் வந்தாலும், தற்போதைய சோதனையை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது தான். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல அணிகள் உருவானது. சசிகலா ஆசீர்வாதத்தில் முதலமைச்சர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, பல கட்ட முயற்சிக்கு பிறகு அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ஆனால், 2026 தேர்தல் தோல்வியும் அதிமுகவில் பிரளயத்தை வெடிக்கச் செய்திருக்கிறது. விஜய்யின் எழுச்சியால் அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கினாலும், கட்சியின் பரிதாப நிலைக்கு எடப்பாடி பழனிசாமியும் காரணம் என்ற குரல் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் பலமாக எழ தொடங்கியிருக்கிறது.

கட்சியில் சேர்க்கவே மாட்டேன்
ஒற்றை தலைமை என போர்க்கொடி தூக்கி கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி, களத்தில் வேகம் காட்டினாலும் கட்சியை பலப்படுத்துவதில் துளியளவும் ஆர்வம் காட்டவில்லை என்ற புகார் வாசிக்கப்படுகிறது. முக்கியமாக, ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய பிம்பம் கட்டிக் காப்பாற்றிய அதிமுகவை, தன் வசப்படுத்துவதில் தான் எடப்பாடி பழனிசாமியின் முழு கவனமும் இருந்தது. எங்கு தன் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம், எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஆக்கிரமித்து வைத்திருந்தது என்று கூட சொல்லலாம். ஏனென்றால், தனக்கு போட்டியாக தலைமை பொறுப்புக்கு குறி வைத்து காய் நகர்த்திய சசிகலா, OPS, டி.டி.வி.தினகரன் ஆகியோரை யோசிக்காமல் நீக்கிக் கொண்டே வந்த எடப்பாடி பழனிசாமி, கடைசி வரை நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்கவே மாட்டேன் என அடம்பிடித்தது அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது.

கட்சி பதவிகள் பறிப்பு
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கூட கருத்து முரண்பாடு காரணமாக முக்கிய புள்ளிகள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆனால், காலத்தின் சூழலுக்கு ஏற்ப அந்த முடிவு மாறியிருக்கிறது. நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட வரலாறும் உள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் நீக்கம் மட்டுமே தொடர்கதையாகி வந்திருக்கிறது. நீக்கப்பட்டவர்களை எக்காரணம் கொண்டும் சேர்க்கவே கூடாது என்ற முடிவிலேயே இருந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது தனக்கு தூணாக நின்ற எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரின் கட்சி பதவிகளையே பறிக்கும் நிலைமைக்கு சென்றிருக்கிறார்.

வெகு தூரத்தில் வெற்றி...
2019 நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி தற்போது வரை அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை தழுவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையும், தேர்தல் வியூகமும் கேள்விக்குள்ளாகி வருகிறது. மீண்டும் மீண்டும் பாஜக கூட்டணிக்குள் சிக்கிக் கொள்வது, பிரிந்து சென்ற நிர்வாகிகளை சேர்க்க மறுப்பது உள்ளிட்ட காரணங்கள் அதிமுகவின் வாக்குகளில் பிளவை ஏற்படுத்தி, அதிமுக என்ற இயக்கத்தை வெற்றிக் கோட்டில் இருந்து மிக நீண்ட தூரத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.

இக்கட்டான சூழலில் அதிமுக
சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம், கே.சி.பழனிசாமி, வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், செங்கோட்டையன் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் செல்கிறது. எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு நீக்கம் மட்டுமே நடவடிக்கை என்ற தாரக மந்திரத்துடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது, அதிமுகவை பலவீனமாக்கி இக்கட்டான சூழலில் தள்ளியிருக்கிறது.

எதிர்காலம் கேள்விக்குறி
முக்கிய புள்ளிகளிடம் இருந்து பதவியை பறித்த எடப்பாடி பழனிசாமி, அதே பொறுப்புக்கு சம்பந்தமே இல்லாத 2ஆம் கட்ட நிர்வாகிகளை கொண்டு வந்திருக்க, மேலும் மேலும் சுணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதே நிலைமை சென்றால் எடப்பாடி பழனிசாமி தனிமரமாக நிற்கும் சூழல் தான் வரும் என்கிறார்கள் அதிமுகவினர். பொன்விழா கண்ட அதிமுக என்ற கட்சியை எடப்பாடி பழனிசாமி என்ற புள்ளியை நோக்கி சுயநலமாக நகர்த்தி கொண்டு சென்றது கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி விட்டது என்கிறார்கள் அதிமுகவினர்.

Related Link
அடுத்த பரபரப்பை கிளப்பிய சி.வி.சண்முகம் அதிமுகவில் நடப்பது என்ன?

அடுத்த பரபரப்பை கிளப்பிய சி.வி.சண்முகம் அதிமுகவில் நடப்பது என்ன?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved