Also Watch
Read this
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் பால், காய்கறி விலை, போக்குவரத்து கட்டணம் ஆகியவை அடுத்தடுத்து உயரும் என அடித்தட்டு மக்கள் தங்கள் வருத்தத்தை கொட்டி உள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தானே உயர்ந்துள்ளது, அதனால் எந்த பாதிப்பும் இல்லையென ஒருதரப்பு மக்கள் கூறி உள்ளனர். விலைவாசி உயர்வை இருவேறு கோணங்களில் மக்கள் பார்க்கும் நிலையில், பொருளாதார நிபுணரும் அதன் எதார்த்தத்தை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு
கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலையும் உயரக்கூடும் என பலரது மத்தியில் பேசப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இதற்கு மத்தியில், 5 மாநில தேர்தல் நடந்ததால் விலை உயர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை திடீரென 3 ரூபாயாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 84 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 3 ரூபாய் 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 103 ரூபாய் 98 காசுக்கு விற்பனை ஆனது. ஒரு லிட்டர் டீசல் விலை 92 ரூபாய் 39 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 95 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமாளிப்பது எளிதல்ல
நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் பால், காய்கறி, மளிகை பொருட்கள், போக்குவரத்து கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்தின் விலையும் உயரும் என வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் என பலரும் கவலை தெரிவித்துள்ளனர். முன்பெல்லாம் பைசா கணக்கில்தான் விலை உயரும், தற்போது ரூபாய் கணக்கில் உயர்வதாகவும், இதையெல்லாம் சாமானிய மக்கள் சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல எனவும் கூறுகின்றனர்.

ஓட்டுநர்கள் கோரிக்கை
எவ்வளவு விலை ஏறினாலும் வாகனங்கள் இல்லாமல் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்லாமல் இருக்க முடியுமா? தொழில்தான் செய்யாமல் இருக்க முடியுமா? என பேசிய பூ வியாபாரி, விலை குறைய வாய்ப்பே இல்லை என்றார். அதேபோல், செப்டோ, ரேபிடோ ஓட்டுநர்களும் இனி தங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறிதான் என கூறியதோடு அதனை கருத்தில்கொண்டு அரசுதான் ஆவன செய்ய வேண்டும் என்றார். ஏற்கெனவே ஆட்டோக்கள் புற்றீசல்போல பெருகிவிட்டதாக கூறிய ஆட்டோ டிரைவர், கூடுதலாக 5 ரூபாய் பயணிகளிடம் கேட்டாலே அவர்கள் ஆயிரம் கேள்வி கேட்பார்கள், அப்படி இல்லையா வேறு ஆட்டோவில் செல்கிறோம் அல்லது பேருந்தில் செல்கிறோம் என கூறுவதாக தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு..
சாதாரண கடைகளில்கூட ஒரு டீயின் விலை 20 ரூபாயாக உயர்ந்து உள்ளதாகவும், சிலிண்டர் விலை உயர்வால் பல ஓட்டல்களே இழுத்து மூடப்பட்டு உள்ளதாகவும் கூறிய மக்கள், இந்த விலைவாசி உயர்வு அடித்தட்டு மக்களின் தலையில்தான் இடியை இறக்கி உள்ளதாகவும், தேர்தல்முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு தேர்தல் முடிந்ததும் விலையை ஏற்றி உள்ளதாக கவலையடைந்தனர்.

என்ன தவறு உள்ளது?
ஒருதரப்பு மக்கள் இப்படி வருத்தம் தெரிவித்தாலும் மற்றொரு தரப்பு மக்கள் விலைவாசி உயர்வை சாதாரணமாகவே எடுத்துக் கொள்கின்றனர். ஒரு இட்லிக்கே 5 ரூபாய் ஏற்றும்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 3 ரூபாய் ஏற்றினால் என்ன தவறு உள்ளது? எனக்கூறியதோடு ஒரு பிளம்பர் ஒரு மணி நேரம் வேலை செய்தாலே ஆயிரம் ரூபாய் வாங்குகிறார், அப்படி இருக்கும் போது பெட்ரோல் டீசல் விலை 4 ஆண்டுகளுக்குப்பிறகுதானே ஏறுகிறது, அது நியாயம்தான் என தெரிவித்தனர்.

பொருளாதார நிபுணர் கருத்து
இப்படி இருதரப்பு மக்கள் விலைவாசியை இருவேறு கோணங்களில் பார்க்கும் நிலையில், எரிபொருள் விலையேற்றம் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலேயே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றும் போர்சூழலுக்கு மத்தியில் இந்தியாவில் தட்டுப்பாடு இல்லாமல் பெட்ரோல், டீசல் கிடைத்ததே பெரிய விஷயம் என்றும் பொருளாதார நிபுணர் கோபாலகிருஷ்ணன் கூறினார். அதேநேரம், விலையேற்றம் தவிர்க்க ஒரு வழி உண்டு என கூறிய பொருளாதார நிபுணர் கோபாலகிருஷ்ணன், இந்த விலைச்சுமையை குறைக்கலாம் என மாநில அரசு நினைத்தால் வரியை ஓரளவுக்கு குறைக்கலாம், ஆனால் அது மாநில பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved