Also Watch
Read this
By: Manigandan Raja

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்கள் குவித்தார்.

நிஷாந்த் சிந்து 20 ரன்களும், ஜோஸ் பட்லர் 19 ரன்களும் சேர்த்தனர். ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார், ரஷிக் சலாம் மற்றும் ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். கோலி 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். பின்னர் டிம் டேவிட் 24 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார். 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்த ஆர்சிபி அணி, 12 பந்துகள் மீதமிருக்கும்போதே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி தொடர்நாயகன் விருதைப் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அகமதாபாத் மைதானத்திலும், பெங்களூரு நகரம் முழுவதும் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved