Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 10:37 AM
ஈரானின் மின்னுற்பத்தி மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் முடிவு, அடுத்த 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக ஈரானுடன் பேச்சு - டிரம்ப்
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர கடந்த 2 நாட்களாக ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன் முடிவை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்து உள்ளார்.

தாக்குதல் தொடரும் - நெதன்யாகு
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்து உள்ளார். ஈரானுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தித் திட்டத்தையும் தொடர்ந்து நசுக்குவோம் என்றும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் தாக்குதல்களை தொடருவோம் எனவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரான் மறுப்பு
போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்கா உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஈரானின் எச்சரிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பணிந்து விட்டார் என்று விமர்சனமும் செய்து உள்ளது. ஹோர்மூஸ் நீரிணையை திறப்பதற்கான 48 மணி நேரக் கெடுவில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பின்வாங்கி விட்டார் என்றும், 5 நாள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு குறித்து ஈரானின் அரசு செய்தி நிறுவனம் கிண்டல் செய்துள்ளது.

இதுவரை சாம்பிள் தான்...
ஈரான் தனது நிலத்தடியில் உள்ள ஏவுகணை கட்டமைப்பு நகரம் குறித்தான புதிய வீடியோவை வெளியிட்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அதிர வைத்து உள்ளது. சுரங்கத்தில் ஏவுகணைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் இடம்பெற்று உள்ளது. இதுவரை நடந்த தாக்குதல் வெறும் sample தான் என்றும், இனிதான் தங்களை தற்காத்து கொள்வதற்கு பயங்கர தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும் பாணியில், ஈரான் ராணுவம் வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஒரே நாளில் 63 இடங்கள்
இஸ்ரேலில் 63 இடங்களை குறிவைத்து ஒரே நாளில் ஹிஸ்புல்லா அமைப்பு கடும் தாக்குதலை நடத்தி உள்ளது. தெற்கு லெபனானில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவ வீரர்கள், கவச வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தளங்கள் என 63 இடங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved