Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 08:47 AM
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில், இரு குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்ட பிறகு, தாயும் உயிரை மாய்த்துக் கொண்டார். கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால், குழந்தைகளுக்கு பிடித்த தின் பண்டங்களை வாங்கிக் கொடுத்து விட்டு, விபரீத முடிவு எடுத்து உள்ளார்.

தொடர் கடன் நெருக்கடி
கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் வசித்து வந்தவர், 26 வயதான இளம் பெண். இவருக்கு 10 மற்றும் 5 வயதில் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, கணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே கடன் அதிகமாக இருந்த நிலையில், கணவர் உயிரை மாய்த்து கொண்ட சூழலில், இளம் பெண் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

விபரீத முடிவு
தொடர்ந்து, கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் மன உளைச்சலுடன் இருந்த அவர், தனது குழந்தைகளை வெளியில் செல்லலாம் என அழைத்து வந்து, ஐஸ்கிரீம், பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி கொடுத்து உள்ளார். பின்னர், மாடம்பாக்கம் அருகே உள்ள விவசாய கிணற்றில் உயிரை மாய்த்துக் கொண்டதாக, காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்

வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
கடன் தொல்லை காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து உள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

படப்பை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மூன்று பேரின் உடலை மீட்டனர். இறந்தவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத நிலையில் ஏராளமான பொது மக்கள் திரண்டனர். இதுகுறித்து படப்பை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved