Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 09:55 AM
தமிழ்நாட்டில் எந்த ஆட்சியாக இருந்தாலும், எப்போதும் போதைப்பொருள் புழக்கம் இருக்கத் தான் செய்கிறது என்று கூறிய அமைச்சர் ரகுபதி, அதிமுக ஆட்சியில் அமைச்சர் மீதே குட்கா வழக்கு இருந்ததாகவும் சாடி உள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்ற போலி நாடகத்தை நடத்த இபிஎஸ் முயல்வதாகவும், திமுக கூட்டணிக்கு 80 விழுக்காடு பெண்களின் ஆதரவு இருப்பதை தெரிந்து கொண்டு, இபிஎஸ்-க்கு மகளிர் மீது திடீர் பாசம் வந்துள்ளதாகவும் கூறினார்.
சிலிண்டர் பிரச்சனை, பேசவில்லை
இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், அமைச்சர் ரகுபதி கூறியதாவது;
எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கூட கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. பாஜக தோழமை கட்சி என்பதால் கேஸ் சிலிண்டர் பிரச்சனையை இபிஎஸ் பேச மறுத்துவிட்டார். எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்பத் தயாராக இல்லை, அதிமுகவினருக்கே அவர் மீது நம்பிக்கை இல்லை. இபிஎஸ் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.
இயன்ற வரை...
குஜராத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான துறைமுகம் வழியாகத் தான் போதைப் பொருள் நாட்டுக்கு வருகிறது. அதிமுக ஆட்சியில் போதைப் பொருள் நடமாட்டம் இருந்தது. குட்காவுக்காக ஒரு அமைச்சர் மீதே வழக்கு போடப்பட்டது. போதைப்பொருள் சப்ளை செய்தவரையே தனது கட்சியில் வைத்திருக்கிறார். நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து கைதானவர் அதிமுக நிர்வாகி. தமிழ்நாட்டில் இயன்ற அளவுக்கு போதைப் பொருளை தடுத்து இருக்கிறோம். பள்ளி அருகே எங்கு போதைப் பொருள் விற்கப்படுகிறது என்று பழனிசாமி சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சீராக சட்டம் - ஒழுங்கு
தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியை விட, தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், திட்டமிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போலி நாடகத்தை உருவாக்க நினைக்கின்றனர். பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்.டி.ஏ. ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. கூட்டணி சரியாக அமையாததால் ஏற்பட்ட விரக்தியில், இபிஎஸ் பேசுகிறார். பிரச்சார பயணத்தில் தோல்வி அடைந்த ஒரே அரசியல் தலைவர் இபிஎஸ் தான்.
ரஜினிகாந்தை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது
எப்பாடு பட்டாவது பொதுச்செயலாளர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற இலக்கோடு தான் இபிஎஸ் செயல்படுகிறார். 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெல்வது உறுதி. ரஜினிகாந்தை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறிவிட்டோம்.
அன்புக்கு தான் ரஜினிகாந்த் அடிபணிவார். யாரும் அவரை மிரட்ட முடியாது. விஜய் கட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை, தவெக தோற்கும் என்பதையும், திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்பதையும் குறிப்பதாகவே எடுத்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved