நடிகர் தனுஷை வைத்து உருவான பிரச்சனையை அடுத்து தென்னிந்திய நடிகர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடிகர்களின் சம்பளத்தை தவணை முறையில் வழங்குவது? தடையில்லா சான்று பெறுவது? தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நிர்வாகிகள் இடையே நடிகர்களின் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடிகர்கள் கமிட் ஆகும் திரைப்படத்திற்கு கொடுக்கப்படும் சம்பளத்தொகையை மொத்தமாக கொடுக்காமல், திரைப்படத்தின் ஒவ்வொரு கட்ட பணிகளும் முடிவடைய முடிவடைய, பகுதி பகுதியாக கொடுக்கலாம் என தயாரிப்பாளர் சங்கம் யோசனை கூறியது. ஆனால், ஒரு படத்திற்காக மற்ற படங்களை கைவிடும் நடிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்களே என நடிகர் சங்கம் ஆட்சேபனை தெரிவித்தது.அதே சமயம் நடிகர்கள் தாங்கள் பெற்றுக்கொள்ளும் ஊதியத்திலேயே கேரவன், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், அசிஸ்டண்ட்கள் ஆகியவற்றுக்கு தேவையான செலவை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்ததற்கு, தயாரிப்பாளர்களே ஒரு குறிப்பிட்ட தொகையை மற்ற செலவுகளுக்கு நிர்ணயித்து வழங்கி விட்டால், நடிகர்களே அதனை கொடுத்து விடுவார்கள் என நடிகர் சங்கம் கூறியுள்ளது. அதே சமயம், அசிஸ்டண்ட்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும் என்றால் அதை நடிகர்கள் தான் கொடுக்க வேண்டும் என்றும் பெப்சி கூட்டமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவோ அதை மட்டுமே தயாரிப்பாளர்கள் கொடுப்பார்கள் என தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. தொடர்ந்து, ஒரு படத்தில் கமிட்டாகும் ஹீரோ, அதை முடித்து கொடுக்காமல் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முதலில் ஒப்பந்தம் போட்ட தயாரிப்பாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியதற்கு நடிகர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் வேலையை தவிர நடிகர்களின் வேலை அல்ல என கூறியதால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதே போல, படத்தின் ப்ரோமோஷனுக்கு நடிகர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டை தவிர்க்க, படத்தின் பிரமோஷன் பணிகள் வரை பங்கேற்று முடித்துக் கொடுத்த பிறகு தான் முழு சம்பளமும் வழங்கப்படும் என தயாரிப்பு தரப்பில் கறாராக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக பிற நிர்வாகிகளுடன் பேசிவிட்டு ஒரு வாரத்தில் பதில் சொல்வதாக நடிகர் சங்கம் கூறியதால், பேச்சுவார்த்தை எந்த முடிவும் இன்றி முடிவடைந்தது. எது எப்படியாயினும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தையை முடித்துவிட இரண்டு சங்கங்களும் முடிவு செய்துள்ளன.