Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 12:50 PM
By: Fyrose Banu

ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் முன்புறமுள்ள பூக்குழி குண்டத்தில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். 10 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் தீக்குண்டத்தில் விழுந்து காயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பங்குனி மாத பூக்குழி திருவிழா
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி மாதத்தின் முக்கிய திருவிழாவான பூக்குழி திருவிழாவில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற பக்தர்கள் பூ இறங்கி வழிபாடு செய்தனர். சுமார் 300 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் பூக்குழி திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பூக்குழி இறங்கும் வைபவம் கோலாகலம்
இதனை தொடர்ந்து தினந்தோறும் ஆறு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் 13 நாட்கள் நடைபெறும் பூக்குழி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 12 ஆம் நாள் திருவிழாவான பூக்குழி இறங்கும் வைபவம் பங்குனி மாத அமாவாசை தினமான இன்று நடைபெற்றது. இதற்கு முன்னதாக கடந்த 12 நாட்களாக விரதம் இருந்து வந்த பக்தர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் உட்பட சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்து செய்து வருகின்றனர்.
பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து பரவசம்
பூக்குழியில் இறங்குவதற்க்கு முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்தும் மஞ்சள் நீரை உடம்பில் ஊற்றி கொண்டும் நான்கு ரதவீதிகள் வழியாக சுற்றி வந்து காலையிலிருந்து வளர்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் பூ மிதித்து வழிபட்டனர். பக்தர்கள் பூக்குழி இறங்குவதை காண ஆயிரகணக்கான பக்தர்கள் அக்னி குண்டத்தை சுற்றி குவிந்துள்ளனர்.
தயார்நிலையில் நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ்
பக்தர்களின் பாதுகாப்பிற்காக 550 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது. இன்று நடைபெறும் பூக்குழி திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்க்கு மேற்பட்டோர் மஞ்சள் காப்பு அணிந்து பூ இறங்கி வருகின்றனர்.
பூக்குண்டத்தில் விழுந்த 10க்கும் மேற்பட்டோர்
இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகள் முழுவதும் விழாக்கோலம் கொண்டுள்ளது. பின்னர் ஆண்கள், பெண்கள், என பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ இறங்கும் போது குண்டத்தில் விழுந்தனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் உடனடியாக மிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved