Also Watch
Read this
By: Manigandan Raja
மீண்டும் அதிமுக ஆட்சி அமைய ஜெயலலிதா பிறந்த நாளில் வீர சபதம் ஏற்போம் என்று அழைப்பு விடுத்துள்ள இபிஎஸ், தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம் என்றும் அதிமுகவினருக்கு வலியுறுத்தி உள்ளார்.

பிப்.24 ஜெயலலிதா பிறந்த தினம்
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவு;
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78ஆவது பிறந்த நாளில், அவரது நெடும் புகழை போற்றுகிறோம், “அம்மா” எங்களின் அடையாளம், ஏழைகளின் நம்பிக்கை, பெண்களின் தைரியம், தாய்மையின் உருவம். அதிகாரம் அவரை உயர்த்தவில்லை, மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது. அவரின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், வறுமை ஒழிப்புக்கான சர்வதேச அளவில் தரநிலையை நிறுவி, ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’
சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மன வலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர். மக்கள் பணிக்கான எங்கள் அனைத்து செயல்களிலும் உங்கள் புத்தகத்திலிருந்து ஒரு அத்தியாயத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று அவர் சொன்னதைப் போல, அதிமுக என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும்” என்று அவர் சூளுரைத்தார். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் அவரது பிறந்த நாள். அஇஅதிமுக அரசின் சாதனைகளையெல்லாம், தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் திமுகவினரின் பிரச்சாரங்களை முறியடித்து, அதிமுக தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்.


ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம் என்று அவரது பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம். ‘நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.’
இவ்வாறு இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved