Also Watch
Read this
By: Manigandan Raja
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்த தீர்ப்பை கேட்டதும் அரவிந்த் கெஜ்ரிவால் கண்ணீர் விடுத்தார். கலால் கொள்கையில் எந்தவித பெரிய சதித் திட்டமோ, குற்றவியல் நோக்கமோ இல்லை என நீதிமன்றம் தெரிவித்ததை எண்ணி கதறி அழுதார்.

வழக்கில் சிக்கிய முன்னாள் முதல்வர்
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது;
நான் ஊழல்வாதி அல்ல, கெஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் முற்றிலும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. உண்மை வெற்றி பெறும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். இந்திய சட்ட அமைப்பின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

கெஜ்ரிவால் ஊழல்வாதி அல்ல
அமித்ஷாவும், மோடியும் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்ட மிகப் பெரிய சதித் திட்டத்தை தீட்டினார்கள். ஆம் ஆத்மி கட்சியின் 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். முதல்வர் பதவியில் இருந்த ஒருவர், வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு செய்தி சேனலிலும், நாங்கள் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டோம். கெஜ்ரிவால் ஊழல்வாதி அல்ல. நான் என் வாழ்க்கையில் நேர்மையை மட்டுமே சம்பாதித்துள்ளேன். இன்று, கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும், ஆம் ஆத்மி கட்சியும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நா தழுதழுக்க கண்ணீர் விட்ட கெஜ்ரிவால்
நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், அத்தகைய ஒரு அரசியலமைப்பை நமக்கு வழங்கிய பி.ஆர்.அம்பேத்கரையும் நினைத்து நாங்கள் மீண்டும் பெருமைப்படுகிறோம். உண்மை மீண்டும் வென்றுள்ளது
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது கெஜ்ரிவால் பேச முடியாமல் நா தழுதழுக்க அழுதார். அருகில் இருந்த மணீஷ் சிசோடியா அவரை ஆறுதல்படுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved