Also Watch
Read this
By: Manigandan Raja

சாடிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் :
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் உடுப்பி ஸ்ரீ பெஜாவர் மடத்தின் மடாதிபதி பூஜ்ய ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிஜிக்கு 'குரு வந்தனம்' மற்றும் அவரது 38-வது அவதார தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், சிறுவர்களின் வேத மந்திரங்கள் முழங்க, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
விழாவின் சிறப்பம்சமாக, சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்காகப் பணியாற்றி வரும் சமூக சேவகர்களை மடாதிபதி கௌரவித்தார். அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி அவர் ஆசி வழங்கினார்.
இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிட்டி யூனியன் வங்கி செயல் அலுவலர் விஜய் ஆனந்த், பெங்களூரு பிஎஸ்என்எல் உதவி
பொது மேலாளர் குரு பிரசாத் ஆச்சார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், குரு தத்துவத்தின் அவசியம் குறித்துப் பேசுகையில், பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களைக் கடுமையாகச் சாடினார்.
நாம் எந்த மடத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், குரு என்ற தத்துவம் ஒன்றுதான். கடவுள் என்பது அப்பாற்பட்ட விஷயம், ஆனால் குரு என்பவர் கடவுளின் நடமாடும் உருவம். நாம் உதவியற்ற நிலையில் இருக்கும்போது நமக்குக் கை கொடுப்பது குருவின் அருள்தான்.
தமிழ்நாட்டில் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொண்டு, குருவை வணங்குபவர்களை 'அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி' எனச் சொல்பவர்கள்தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள், காட்டுமிராண்டிகள்.... என்று ஆவேசமாக அவர் பேசினார்.
நீதிபதியின் இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மடாதிபதியின் ஆசியைப் பெற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved