Also Watch
Read this
By: Manigandan Raja

தொழிற்சாலையில் தீவிபத்து :
விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் சந்தியா என்விரோ டெக் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த பகுதியில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவக் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலையில் இன்று நண்பகல் சுமார் 12 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிவதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய மருந்து கழிவுகள் மற்றும் பிற பொருட்கள் தீப்பற்றியதால், சுமார் 200 அடி உயரத்திற்கு மேல் கரும்புகை வானத்தை நோக்கி
எழுந்து அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது.
இந்த புகை காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதாகவும், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் விழுப்புரம் காணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் விழுப்புரத்திலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ வேகமாக பரவியதால் அதை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
இருப்பினும் தீ தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அந்த பகுதியில் பெரும் புகைமண்டலம் காணப்படுகிறது. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved