Also Watch
Read this
பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளார்.

சிவகாசியில் இபிஎஸ்
சிவகாசி பேருந்து நிலையம் அருகே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாம் செய்தார்.
அப்போது இபிஎஸ் பேசியதாவது:
காவிரி - குண்டாறு திட்டம் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் வழியாக, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கு உதவும் வகையில், இந்த திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டி வைத்தேன். ஆனால், இந்த திட்டத்தை திமுக திட்டமிட்டு முடக்கி வைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் விருதுநகர் மாவட்டம் பசுமையாக மாறும்.

சிறுமி முதல் மூதாட்டி வரை
இந்த ஆட்சியில், சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆள்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும் டிஜிபி நியமிக்கவில்லை. எங்கே பார்த்தாலும் கஞ்சா, போதை மாத்திரை, சாக்லேட், திரவம் என பல ரூபத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்
போதை ஆசாமிகளால் போலீசுக்கே பாதுகாப்பில்லை. போதை ஆசாமிகளால் கொ*, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. டிஜிபி ஒருவர் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என்று, ஓ போட்டுக்கொண்டே ஓய்வுபெற்று விட்டார்.

ஏனெனில் கஞ்சா விற்பதே ஆளுங்கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான். அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தமிழகத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு, பை, பை, ஸ்டாலின்.

ரூ.5 லட்சம் கோடி கடன்
நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர்.தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில், இரு ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக பேசியது குறித்து, முதல்வர் இதுவரை பதில் தரவில்லை.
இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம் என்கிறார். ஊழல் செய்வதில் இந்தியாவில் நம்பர்-1 ஆட்சி. ஊழலுக்கு கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு. திமுகவையும், ஊழலையும் பிரிக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டார்.
இவ்வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved