Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் :
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டவுடன், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் சர்வதேசக் கூட்டுப் பணியில் இணைந்து செயல்பட ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஜெர்மானிய கடற்படையின் 'ஃபுல்டா' ((Fulda)) எனும் கண்ணிவெடி அகற்றும் போர்க்கப்பல் மத்திய தரைக்கடல் பகுதிக்குப் புறப்படும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள்- ராணுவம் இடையே மோதல் :

மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் ஆயுதமேந்திய கிளர்ச்சி படைகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தலைநகர் பமாக்கோ உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஆயுதமேந்திய கிளர்ச்சியார்கள் ராணுவ முகாம்களை குறிவைத்து பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மாலியில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. பொதுச் சபை தலைவரை சந்தித்த இந்திய அதிகாரி :

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை தலைவர் அன்னலினா பேர்பாக்கை, இந்திய வெளியுறவு அமைச்சக மேற்கு பிரிவுச் செயலாளரும், தூதருமான சிபி ஜார்ஜ் சந்தித்து பேசினார். அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் :

கொலம்பியாவில் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதோடு, 5 குழந்தைகள் உட்பட 38 பேர் படுகாயமடைந்தனர். கௌகா மாகாணம் கஜிபியோவில் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து மீது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய FARC பிரிவுகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
லெபனானில் போர்நிறுத்த ஒப்பந்தம் - இஸ்ரேல் தாக்குதல் :

லெபனானில் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதால் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய சோலார் தயாரிப்புகளுக்கு123 % வரி விதிப்பு :

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி செல்கள், மாட்யூல்களுக்கு தற்காலிகமாக, 123 புள்ளி 04 சதவீதம் அளவுக்கு பொருள்குவிப்பு வரி என்றழைக்கப்படும் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உத்தரவு வெளியிடப்படுவதற்கு 90 நாட்களுக்கு முன், அனுப்பப்பட்ட சரக்குகளுக்கும் இந்த வரி விதிப்பு பொருந்தும் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ஆதரவாளர் சலீம் தோலா கைது :
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ஆதரவாளரும், போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான சலீம் தோலா, இஸ்தான்புல் நகரில் துருக்கி பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். மும்பை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று, சலீம் தோலாவுக்கு எதிராக இண்டர்போல் சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved