நான்கு லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் போதவில்லை என, கிரிக்கெட்டர் ஷமியின் முன்னாள் மனைவி கொடுத்த மனுவைக் கண்டு அதிர்ச்சி தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதிக ஜீவனாம்சம் கேட்க இதுதான் காரணம் என வழக்கறிஞர் சொன்ன தகவல் தான் நீதிபதிகளைத் தாண்டி கேட்போர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. விவரம் என்ன?இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும், கடந்த 2018ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், விவாகரத்து பெற்ற பின் ஹசினுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாயும், அவரது மகளுக்கு மாதம் 80 ஆயிரம் ரூபாயும் ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஹசின், மாதம் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென தனது மனுவில் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதியோ, ஹசினுக்கு மாதம் ஒன்றரை லட்சம் ரூபாயும், மகளுக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் சேர்த்து மொத்தம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்கலாம் என உத்தரவிட்டனர். இந்த நிலையில், மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் போதவில்லை என மீண்டும் ஷமியின் முன்னாள் மனைவி உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி, “மாதத்திற்கு 4 லட்சம் ரூபாய் என்பது நிறைய பணம் இல்லையா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நீதிமன்றத்தில் வாதாடிய ஹசினின் வழக்கறிஞர், “ஷமி நிறைய பணம் சம்பாதிக்கிறார். அவருக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சொகுசு கார்கள் உள்ளன. அவ்வப்போது ஷமி வெளிநாடு செல்வது என்றெல்லாம் ஆடம்பர வாழ்க்கையும் நடத்தி வருகிறார்” என்றும் “பல மாதங்கள் அவர் ஜீவனாம்சம் தரவில்லை, முன்னாள் மனைவிக்கு உரிமை இல்லாவிட்டாலும் அவரது மகளுக்கு தந்தைக்கு இணையான வாழ்க்கைத் தரம் அமைய வேண்டுமல்லவா?” என்றும் கேள்வியெழுப்பினார். இதைக் கேட்ட நீதிபதிகள், ஷமி நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தனர். இதையும் பாருங்கள் - "காசு பத்தலை" - முகமது ஷமிக்கு மீண்டும் இடியை இறக்கிய Ex.Wife |Mohammed Shami wife