Also Watch
Read this
தேனி, பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது பேசவிடாமல் எரிச்சலூட்டிய இளைஞரின் கன்னத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பளார் என அறைவிட்டார். பலமுறை சொல்லிப் பார்த்தும் காதுகொடுத்து கேட்காமல் செல்பி எடுப்பதிலேயே சில இளைஞர்கள் மும்முரமாக இருக்க, மற்றொருபுறம் பேசவிடாமல் கைதட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்ய கடைசிவரை முகம் சுழித்தவாறே திருமாவளவன் பிரச்சாரம் செய்யும் நிலை ஏற்பட்டது.

யாரு சாமி நீ?
திருமாவின் கையால் கன்னத்தில் பளார் என அறையையும் வாங்கிவிட்டு அசராமல் நின்று ஆர்வமுடன் செல்பி எடுக்கும் இந்த இளைஞரை பார்க்கும்போது ”யாரு சாமி நீ” என்றுதான் கேட்க தோன்றுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக, தவெக, நாதக என அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் சூறாவளிபோல் சுற்றி சுழன்று வருகின்றனர். அந்தவகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் தனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் முகச்சுழிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்தன.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு
திருமாவின் வருகைக்கு முன்பாக, சாலையில் திரண்டிருந்த விசிக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக நடனமாடி போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர். அதனால்கூட பெரிய அளவில் பிரச்சனையில்லை. ஆனால், நோயாளி ஒருவருடன் அந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கிக் கொண்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சைரனை அடித்து அடித்து சோர்வானதுதான் மிச்சம். சைரன் சத்தத்தை காதில் வாங்காமலும், வழிவிடாமலும் தொண்டர்கள் நடனமாடியதால் நீண்டநேரம் நகர முடியாமல் ஆம்புலன்ஸ் தவித்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பலரும் எச்சரித்ததை அடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டனர்.

அன்பாக சொல்லியும்...
இதனை தொடர்ந்து பெரியகுளம் வேட்பாளர் சக்திவேல், தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தங்கதமிழ்ச்செல்வன், ஓ.பி.எஸ். உள்ளிட்டோருடன் திருமாவின் பிரச்சாரம் வாகனம் வந்தது. பானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பேசிவிட்டு ஓபிஎஸ் கீழே இறங்க, மைக்கை கையில் வாங்கி பேச ஆரம்பித்தார் திருமா. அவரது முதுகுக்கு பின்னால் நின்று சில இளைஞர்கள் காதருகே கத்தி கொண்டிருக்க, பிரச்சார வாகனத்தில் ஓரத்தில் ஏறி நின்று கொண்டு சில இளைஞர்கள் செல்பி எடுப்பதில் மும்முரமாக இருக்க பேச முடியாமல் முகம் சுழித்த திருமா, செல்பி எடுக்க முயன்ற இளைஞர்களை கீழே இறங்குமாறு அன்பாக சொல்லி பார்த்தார். ஆனால், அதனை கண்டுகொள்ளாத இளைஞர்கள் வண்டியைவிட்டு இறங்கவே இல்லை.

செல்ஃபி எடுப்பதிலேயே...
ஒரு கையில் மைக் இருந்தாலும், மற்றொரு கையால் இளைஞர்களின் நெஞ்சை பிடித்து தள்ளியும், தோளை பிடித்து தள்ளியும், கீழே இறங்குப்பா இறங்குப்பா என பலமுறை எச்சரித்து பார்த்தார் திருமா. ஆனாலும் அசைந்து கொடுக்காத அந்த இளைஞர்கள் மீண்டும் மீண்டும் செல்பி எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். இதுஒருபுறமிருக்க, கீழே நின்று கொண்டிருந்த தொண்டர்களும் திருமாவை பேசவிட்டு கை தட்டி ஆரவாரம் செய்தாலோ அல்லது விசிலடித்தாலோ ரசிக்கலாம். ஆனால், பேசிக்கொண்டிருக்கும்போதே ஆரவாரம் என்றபெயரில் கைதட்டி விசிலடித்து இடையூறு செய்ததால் திருமாவின் வார்த்தைகள்கூட தெளிவாக வந்து விழவில்லை. இதற்கிடையில் ஒரே ஒரு இளைஞர் மட்டும் திருமா பேச ஆரம்பித்தது முதல் ஓராயிரம் செல்பியாவது எடுத்திருப்பார். எத்தனைமுறை எடுத்தாலும் ஒரே முகம்தானே? பேச்சை கேட்க வந்தார்களா? அல்லது செல்பி எடுக்க வந்தார்களா என பார்ப்பவர்களுக்கு சலிப்பே ஏற்பட்டுவிட்டது.

அறை வாங்கிய தொண்டர்
இப்படி இளைஞர்கள் கொடுத்த செல்பி இம்சையால் ஒருகட்டத்தில் கடுப்பான திருமா, தனது வலது கையில் இருந்த மைக்கை இடதுகையில் மாற்றிவிட்டு ஒரு இளைஞரின் கன்னத்தில் பளார் என அறைவிட்டார். அடுத்து, ஏய்... பேசிக் கொண்டிருக்கிறேன்ல... என சொல்லிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். அப்போது, கீழே நின்று கொண்டிருப்பவர்களுமே இளைஞரை கீழே இறங்குமாறு அழைத்துப் பார்த்தனர். ஆனால், அறையை வாங்கிய அந்த இளைஞரோ ”அறை கிடக்கிறது அறை” அது ஒரு பிரச்சனையா? என்பதுபோல் மனம் தளராமல் மறுபடியும் வண்டியிலேயே நின்று கொண்டு ஆர்வமுடன் செல்பி எடுத்து கொண்டிருந்தார்.

தொடர் இடையூறு
ஆக மொத்தம் பேச ஆரம்பித்தது முதல் பேச்சை முடிக்கும்வரை இளைஞர்கள் கொடுத்த இடையூறால் முகம் சுழித்தபடியேதான் நின்று கொண்டிருந்தார் திருமாவளவன். இப்படி, அறை வாங்கியும் ஆர்வமுடன் செல்பி எடுத்த இளைஞர் யார்? அடிவாங்கியும் ஆர்வமிகுதியில் செல்பி எடுக்கும் அளவுக்கும் திருமாவின் தீவிர ஆதரவாளரா? என கேள்வி எழுப்பும் பொதுமக்கள் அதேநேரம் இதுபோன்று பிரச்சார வாகனத்தில் ஏறி இளைஞர்கள் இடையூறு கொடுக்காதவாறு அரசியல் கட்சி தலைவர்கள் முன்னேற்பாட்டுடன் வர வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved