Also Watch
Read this
அடுக்குமாடி குடியிருப்பு புதிய அரசாணை.. என்ன சொல்கிறது புது ரூல்ஸ்?
என்ன சொல்கிறது புது ரூல்ஸ்?
Updated: Sep 29, 2024 11:40 AM
அடுக்குமாடி குடியிருப்பு விவரங்களை பதிவு செய்ய வேண்டும், குடியிருப்பு வாசிகள் சங்கம் ஒன்றை நிறுவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிகளுடன், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டம் தொடர்பான புதிய விதிகளை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தனி வீடுகளை வாங்கவோ, கட்டவோ செலவு அதிகமாகும் என்பதால், விலை குறைவு என்ற ரீதியில் மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க விரும்புகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டத்திற்கு புதிய விதிகளை வகுத்து தமிழ்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையின் படி, அடுக்குமாடி குடியிருப்பின் பெரும்பான்மை உரிமையாளர்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான பல்வேறு விவரங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் சொசைட்டி அல்லது சங்கம் ஒன்றை நிறுவி, அதை பதிவு செய்ய வேண்டுமென்றும், அந்த சங்கத்திற்கான துணைவிதிகளை உருவாக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டிடங்களை மறுகட்டுமானம் செய்ய வேண்டுமெனில், நிர்வாக குழு சுயமாகவோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் நான்கில் ஒரு பகுதியினரின் கோரிக்கையின் பேரில் ஒரு சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, திட்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் சம்மதத்துடன் இந்த தகவலை சம்பந்தப்பட்ட நகர்புற திட்டமிடல் அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும் என அரசாணை குறிப்பிடுகின்றது.
மறுவடிவமைப்புத் திட்டம் முடிந்ததும், கட்டிடத்தை காலி செய்யுமாறு உரிமையாளர்களுக்கு சங்கம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், யாரேனும் ஒருவர் வெளியேற மறுத்தால், அவரை போலீஸ் பாதுகாப்புடன் சங்கம் வெளியேற்றலாம் என்றும் இந்த அரசாணை தெரிவிக்கின்றது.
இந்த விதிகளின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இணையதளத்தை சம்பந்தப்பட்ட துறை உருவாக்க வேண்டும் என்றும்,
இந்த விதிகளை செயல்படுத்தும் அதிகாரிகளாக பதிவுத்துறையின் அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் செயல்படுவார்கள் என்றும், துணை பதிவுத்துறை தலைவர்கள் மேல்முறையீட்டு அதிகாரிகளாக இருப்பார்கள் என்றும் தமிழக அரசின் புதிய அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved