தூத்துக்குடி அருகே கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், பணத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து இரண்டு மடங்காக தருவதாக கூறி, சுமார் 3 கோடி ரூபாய் வரை பெற்று கொண்டு போலி சாமியார் தலைமறைவான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடன் வாங்கி பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர்.... தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அடுத்த புங்கவர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தன்னை சாமியார் என கூறிக் கொள்ளும் இவர், ஜோசியம் பார்ப்பதாகவும், முள் மேல் படுத்து ஆடிய வீடியோக்களை யூடியூப் ஒன்றை தொடங்கி அதில் பதிவிட்டு வந்துள்ளார். மேலும், யூடியூப் பக்கத்தில் உள்ள வீடுகளை காட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களை திசை திருப்பும் முயற்சியில் இறங்கிய போலி சாமியார் பாலசுப்பிரமணியன், மனைவி பாண்டியம்மாள் மற்றும் மகன் அய்யாதுரை உடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கோயில்களை சுற்றி வந்துள்ளார். குறிப்பாக சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சென்ற பாண்டியன் என்பவரிடம் பேச்சு கொடுத்த பாலசுப்பிரமணியன், உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு அதனை தீர்த்து வைப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி பாலசுப்பிரமணியன் அழைத்த இடத்திற்கு சென்ற பாண்டியனிடம் உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய பூஜை செய்துள்ளதாகவும், உங்கள் வீட்டில் உள்ள பணத்தை கொண்டு வந்து கொடுத்தால் இரண்டு மடங்காக திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி 47 லட்சம் ரூபாய் பணத்தை பாண்டியன் கொடுத்த நிலையில், அதனை பெற்று கொண்ட போலி சாமியார் செல்போன் எண்ணை அணைத்ததோடு, தலைமறைவானதாக கூறப்படுகிறது. அதே போல் கவிதா என்ற பெண்ணிடம் 40 லட்சம் ரூபாயை பெற்று கொண்டதோடு, திருப்பி தருவதாக கூறி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் நடவடிக்கை எடுக்காமல் விரட்டி அடிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளார். போலி சாமியார் பேச்சை கேட்டு கடன் வாங்கி 40 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், தற்போது கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்து வருவதாகவும், வேதனையுடன் தெரிவித்த கவிதா, வீட்டிற்கு வாடகை கூட கட்ட முடியாத நிலையில் உள்ளதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதே போல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பலரும் போலி சாமியாரிடம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக புகார் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள போலி சாமியார் பாலசுப்பிரமணியனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.....