Also Watch
Read this
Posted on: Oct 28, 2025 12:31 PM
By: Web Team

மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், அதிமுகவை இபிஎஸ் சரண்டர் செய்து விட்டதாக, மாமல்லபுரம் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தமது சொந்தக் கட்சியின் உரிமைகளையே அடகு வைத்து விட்டதால் மக்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரமில்லை என்றும் கூறினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று, பாஜக பகல் கனவு காண்பதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக - அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல் எனவும் பேசினார்.
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து, அவற்றைத் தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதற்கான பயிற்சிக் கூட்டம், மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இங்கு உட்கார்ந்திருக்கும் உங்கள் மனதில், இப்போது என்ன ஓடிக் கொண்டு இருக்கிறது என்று எனக்கு நன்றாக தெரிகிறது. தலைவரும் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார், நம்மையும் சும்மா இருக்க விடமாட்டேன் என்கிறார் என்று, சிலர் நினைப்பீர்கள். சுணங்கி சும்மா இருந்து விட்டால், நாம் ஒரே இடத்தில் தேங்கி விடுவோம். அது தேக்கம். உழைப்பைக் கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கி கொண்டே இருக்க வேண்டும். அதுதான் இயக்கம்.
தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என பா.ஜ.க. - அ.தி.மு.க. தப்புக்கணக்கு போடுகிறது.
நமது இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமான உங்களை நம்பி, ''என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி'' என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கோம். உங்களின் உழைப்பால், ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாம், அடுத்து ஏழாவது முறையாகவும் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு தான், இந்த பயிற்சிக் கூட்டம். என் அழைப்பை ஏற்று, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த நிர்வாகிகள் அனைவரும், இந்தச் செய்தியை உங்கள் மாவட்டத்துக்கு, நகரத்துக்கு, கிராமத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்.
நான் சொன்னதை சொல்லுங்கள். நான் கேட்டுக்கொண்டதை சொல்லுங்கள். ஒவ்வொரு தொண்டரையும் நான் விசாரித்ததாக, சொல்லுங்கள். நான் உழைக்கச் சொன்னதை சொல்லுங்கள். நான் அவர்களை நம்பி இருக்கிறேன் என்று சொல்லுங்கள். 2026ம் ஆண்டு தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். ஆணவத்தில் சொல்லவில்லை; உங்கள் உழைப்பு, ஆட்சியின் சாதனை, மக்கள் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்கிறன். 2021ம் ஆண்டு தேர்தல், தமிழகத்தை அதிமுகவிடம் இருந்து மீட்ட தேர்தல்.
2026ம் ஆண்டு தேர்தல் என்பது தமிழகத்தை பாஜக, அதிமுகவிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். தமிழகத்தை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கு தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அதிமுக-பாஜக கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை. அவர்களது கட்சியினரும் விரும்பவில்லை. மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு போகவில்லை. நம் வெற்றி, எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved