தவெக தலைவர் விஜய் உடன், செல்போனில் பேசியதாக வெளியான தகவலுக்கு, முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். தனது கூட்டங்களில் தவெக தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் திட்டமிட்டு விமர்சிப்பதாகவும் இபிஎஸ் ஆவேசப்பட்டார். அதோடு, தவெக உடன் கூட்டணி அமைப்பது பற்றிய கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல், பொறுத்திருந்து பாருங்கள் என சஸ்பென்ஸ் வைத்தும் சென்றார். எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தின் கீழ் நீர் நிரம்பியுள்ள வைரன் ஏரி, வாத்திப்பட்டி ஏரிகளை அவர் பார்வையிட்டார். ஏரிகளுக்கு மலர் தூவிய இபிஎஸ், அங்கிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், மேட்டூர் அணையில் இருந்து 100 ஏரிகளுக்கு உபரிநீர் நிரப்பும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் மந்த கதியில் இருந்ததால், இதுவரை 59 ஏரிகளுக்கு மட்டுமே தண்ணீர் வந்துள்ளது என குற்றம் சாட்டினார்.