Also Watch
Read this
முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நடிகரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தவெக சார்பில் போட்டியிடப் போவதாக தகவல் பரவி வந்த நிலையில், வரும் 11ஆம் தேதி தனது வாழ்க்கையில் முக்கிய முடிவு ஒன்றை அறிவிக்க இருப்பதாக கூறி அந்த ஊகங்களுக்கு உயிர்கொடுப்பது போல் பீடிகை போட்டிருக்கிறார் லாரன்ஸ். ஒட்டுமொத்த தமிழகமும் உற்றுநோக்கும் திருச்சி கிழக்கில் உண்மையிலேயே போட்டியிடப் போகும் தவெக வேட்பாளர் யார்? தவெக வேட்பாளர் முகங்கள் அடுத்தடுத்து மாறுவது ஏன்? மற்ற இடைத்தேர்தல்களை போல் அல்லாமல் எதற்காக இத்தனை முக்கியத்துவம்?

தனிப்பெரும் கட்சி தவெக
தமிழ்நாட்டில், மாறி மாறி கோலோச்சிக் கொண்டிருந்த இருபெரும் திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டி, தொடங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் விஸ்வரூப வெற்றியால், தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாக அமைந்தது 2026 சட்டமன்ற தேர்தல். தவெக தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலுமே மாபெரும் வெற்றி பெற்றார். அதில் பெரம்பூரை தக்கவைத்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் யார்?
இருப்பினும் தேர்தல் வெற்றிக்கு பிறகு, முதல் முறையாக திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கே நன்றி தெரிவிக்க சென்றார் முதல்வர் விஜய். அதன் மூலம் திருச்சி கிழக்கு தொகுதி தனது மனதுக்கு எவ்வளவு நெருக்கம் என்பதை முன்னிறுத்திய விஜய், அந்த தொகுதி தனது செல்லப்பிள்ளை என மேடையிலும் முழங்கினார். அதுமட்டுமின்றி உங்களில் ஒருவரை தான் இடைத்தேர்தலில் வேட்பாளராக நிற்க வைக்க போவதாகவும் தெரிவித்தார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்...
இது இப்படியிருக்க, திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, அங்கு தவெக சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் களம் இறக்கப்படலாம் என தகவல் பரவியது. முதலமைச்சர் விஜயின் திருச்சி விஜயத்திற்கு பிறகு, மண்ணின் மைந்தரான கு.ப.கிருஷ்ணன் அல்லது அவரது மகன் சிரஞ்சீவி ஆகியோர் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. அடுத்ததாக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் பெயரும், தவெக வேட்பாளர் ரேசில் அடிபட்டது. அந்த வரிசையில் தான் நடிகர் ராகவா லாரன்சின் பெயரும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

லாரன்ஸ்க்கு வாய்ப்பு
கடந்த சில நாட்களாகவே திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில், நடிகரும், முதலமைச்சர் விஜயின் நண்பருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஏற்கனவே சக நடிகரும், நண்பருமான ஸ்ரீநாத்துக்கும் தேர்தலில் வாய்ப்பு வழங்கிய விஜய், அவரை அமைச்சராக்கியும் அழகு பார்த்ததால், இப்போது லாரன்ஸுக்கு வாய்ப்பளித்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்றனர் அரசியல் நோக்கர்கள். நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட ஸ்ரீநாத்துக்கே அமைச்சர் பதவியை தூக்கி கொடுத்த விஜய், பன்னெடுங் காலமாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும், ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து வரும் லாரன்ஸ்க்கு வாய்ப்பளிப்பது அவ்வளவு பெரிய தவறில்லை என்றே பலரும் கருத்து தெரிவித்தனர்.

தவெகவில் இணைவாரா?
இந்த நிலையில் தான், ஊடகங்களில் பரவும் தன்னைப் பற்றிய ஊகங்களை குறிப்பிட்டு சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் லாரன்ஸ். பதிலளித்தே ஆக வேண்டும் என்ற கட்டத்துக்கு ஊகங்கள் வளர்ந்து விட்டதாகவும், தற்போது பென்ஸ் பட ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் பின்னர் விளக்கமளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக தனது தாயின் ஆசீர்வாதத்துடன் தனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவை வரும் 11ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அறிவிப்பதாகவும் பலமாக பீடிகை போட்டிருக்கிறார். அந்த முக்கிய அறிவிப்பு அவரது அரசியல் பிரவேசம் பற்றியதாகவே இருக்கும் என்றும், அதிலும் முக்கியமாக தவெகவில் இணைவது பற்றியே இருக்கலாம் என்றும் கூறப்படுவதால், அவர் திருச்சி கிழக்கில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக பலரும் கூறி வருகின்றனர். அதே சமயம் தீவிர ரஜினி ரசிகரான லாரன்ஸ், ஒரு போதும் விஜய் கட்சியில் சேர மாட்டார் என தெரிவித்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

தவெக vs திமுக
தவெக அரசின் ஆட்சித்திறன், நிர்வாக செயல்பாடுகளுக்கு, மக்கள் மார்க் போடும் தேர்தல் என்பதால், திருச்சி கிழக்கை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விஜய். அதே கண்ணோட்டத்தில் தவெக அரசு நிர்வாக திறனற்றது, திரைக் கவர்ச்சியால் அதிகாரத்துக்கு வந்தவர்களால் திறமையாக ஆட்சி நடத்த முடியாது என நிறுவியாக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதால், திருச்சி கிழக்கை கைப்பற்றியே தீர வேண்டிய சூழலில் உள்ளது திமுக. முதலமைச்சர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், தவெக ஒருவேளை வெற்றி வாய்ப்பை இழந்தால் ஆட்சி மீதான நம்பிக்கையே அற்று போனதாக ஆகிவிடும். இவ்வாறாக பல்வேறு நெருக்கடி சூழ்ந்திருக்க, இரு தரப்பிலுமே களமிறக்கப்படும் வேட்பாளர்களின் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறி நிற்கிறது. ஒட்டுமொத்தத்தில் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியே தவெக - திமுகவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது என்றால் அது மிகையாக இருக்காது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved