Also Watch
Read this
By: Manigandan Raja

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அதே ரயிலில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற 78 வயது முதியவரும் பயணித்துள்ளார்.
பயணத்தின் போது, ஜெயக்குமார் தன் அருகில் அமர்ந்திருந்த வட மாநில இளம் பெண்ணை, தன் செல்போனில் ஆபாசமாகப் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. முதியவரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு, அவரது செல்போனைப் பிடுங்கிச் சோதித்துள்ளார்.
அப்போது தான் ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்டதை அவர் உறுதி செய்தார். ரயில் மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர், முதியவரைப் பிடித்து அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது அங்கிருந்த பயணிகள் ஆபாசம் நோக்கில் புகைப்படம் எடுத்த ஜெயக்குமாரை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதனை பின்னர் அவர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ரயில்வே போலீசார் முதியவர் ஜெயக்குமாரின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, போலீசாரே அதிர்ந்து போயினர். அவர் செல்லும் வழிகளில் எல்லாம், சாலையிலும் பொது இடங்களிலும் இருக்கும் இளம் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் ஆபாசமாகப் படம் பிடித்து, அதைத் தனது செல்போனில் ரகசியமாகச் சேமித்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே, வட மாநிலத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர் அவசரமாகச் செல்ல வேண்டியிருந்ததாலும், நீதிமன்ற அலைச்சல்களுக்குப் பயந்தும் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க மறுத்துவிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் எதுவும் தராததால், ரயில்வே போலீசார் 78 வயது முதியவரான ஜெயக்குமாரை முறைப்படி வழக்குப்பதிவு செய்யாமல், எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். பொது இடங்களில் பெண்களை ரகசியமாகப் படம் பிடித்த முதியவர், புகாரில்லாத காரணத்தால் தப்பிய சம்பவம் மதுரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved