Also Watch
Read this
Posted on: Mar 27, 2026 06:22 AM
பாமக உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில், தீர்வு எட்டப்படும் வரை, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாம்பழம் யாருக்கு?
பாமகவில், மாம்பழம் சின்னம் யாருக்கு? என்பதில் வழக்கு காரணமாக நீடித்து வந்த குழப்பத்தை நீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்திருப்பதால் அன்புமணி தரப்பினர், இரட்டை மகிழ்ச்சியில் தேர்தல் பணிகளில் பம்பரமாய் சுற்றுச் சுழன்று ஈடுபட்டு வருகின்றனர். மகன் அன்புமணி உடனான பிரச்னையால், தான் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னத்தை கேட்டே மருத்துவர் ராமதாஸ், நீதிமன்ற படியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருந்தார். பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு காரணமாக தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்புக்கே மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியதால், அதனை ராமதாஸ் சட்டப்படி எதிர்கொள்ள தயாராகி, டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். அங்கே, சிவில் நீதிமன்றத்தை நாட உத்தரவிடப்பட்டது. அதன்படியே, அவர் தொடர்ந்த வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம்
இதனிடையே, பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தன்னை தலைவராகவும், தான் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தை, ராமதாஸ் நாடினார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது நிலுவையில் உள்ளது என்பதால், உரிமையியல் நீதிமன்றத்தை அணுகியே நிவாரணம் தேடிக் கொள்ளலாம் எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால், அதிருப்தியடைந்த ராமதாஸ் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மாம்பழம் சின்னம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் உடனடியாக மனுத் தாக்கல் செய்யும்படி ராமதாஸ் தரப்புக்கும், அந்த மனுவை விசாரித்து மூன்று நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உரிமையியல் நீதிமன்றத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மாம்பழம் சின்னத்தை முடக்க மனு
இந்த நிலையில், மாம்பழம் சின்னம் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உட்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று, ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் தலையிட முடியாது
இந்த மனுவை விசாரித்த 13ஆவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு, ஏற்கனவே தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு உள்ளதையும், புதுச்சேரியில் வேட்புமனு பரிசீலனை முடிந்ததையும் சுட்டிக் காட்டியதோடு, தேர்தல் நடைமுறைகள் துவங்கி விட்டதால், நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்ற ராமதாசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், சட்டத்தில் அனுமதி இருந்தால், இந்த விவகாரம் தொடர்பாக, ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கலாம் என்றும், அதை தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்றும், நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved