news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news திமுக உடன் கூட்டணி வைத்தது தான் பெரிய தப்பு என்கிறார் வைகோ
tv

Also Watch

tv

Read this

திமுக உடன் கூட்டணி வைத்தது தான் பெரிய தப்பு என்கிறார் வைகோ

மகன் அப்படி பேசல, பூசிமொழுகிய வைகோ

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

துரதிஷ்டவசமாக திமுக கூட்டணியில் இருந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதாகவும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான் திமுக கூட்டணியிலேயே தொடர்வதா அல்லது இல்லையா? என்பதுகுறித்து அறிவிக்க உள்ளதாகவும், திருச்சியில் முதலமைச்சர் விஜய்யை வரவேற்றபின் மதிமுக எம்பி துரை வைகோ பேசி இருந்தார். தவெகவிற்கு அடுத்த விக்கெட் மதிமுகதான் என பேசப்பட்டு வந்த நிலையில் தனது மகன் ஆதங்கத்தில் பேசிவிட்டதாக பூசிமொழுகிய வைகோ தன் பங்குக்கும் திமுக மீதான ஆதங்கத்தை நைசாக கொட்டி உள்ளார்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல், பலரது அரசியல் அனுமானத்தையே தலைகீழாக்கிய தேர்தல் என்றுதான் சொல்ல வேண்டும். 108 இடங்களை பிடித்து தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சியமைக்க முடியாமல் அடுத்த கட்சிகளின் ஆதரவுக்காக காத்திருந்தது. அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெகவுடன் காங்கிரஸ் கரம்கோர்த்து ஆட்சியமைப்பதற்கான பலத்தை மெல்ல தூக்கிவிட்டது. ஆனாலும், பலம் முழுமை பெறாமல் தொங்கி கொண்டிருக்க ஜனாதிபதி ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக வெளியிலிருந்துதான் ஆதரவு மற்றபடி அமைச்சரவையில் அறவே நுழையமாட்டோம் என சிபிஐ, சிபிஎம், விசிக ஆகியோர் ஆதரவுக்கரம் நீட்ட தமிழ்நாட்டில் ஒருவழியாக விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்தது.

அரசியலை புரட்டிப்போட்ட தேர்தல்
அதன்பின்னர், அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என விசிகவிற்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தவெக வலைவிரிக்க பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு அவர்களும் அமைச்சரவையில் இடம்பிடித்து அரசியல் களத்தையே ஆச்சரியப்பட வைத்தனர். அதனால்தான் 2026 சட்டமன்ற தேர்தல் அரசியலையே புரட்டிப்போட்ட தேர்தல் என அரசியல் விமர்சகர்களே கூறுகின்றனர்.

முதல்வரை வரவேற்ற துரை வைகோ
இப்படிப்பட்ட சூழலில், தான் போட்டியிட்ட 2 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்எல்ஏவாக இருக்க முடியும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை, விஜய் ராஜினாமா செய்தார். இந்நிலையில், அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய்யை விமான நிலையத்தில் வரவேற்றார் மதிமுக எம்.பி. துரை வைகோ. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்கள் இனி தனி இயக்கம், துரதிஷ்டவசமாக திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதாகவும், அதனால்தான் தங்களால் தவெகவிற்கு ஆதரவு தரமுடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், வரும் 27ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட உள்ளது. அந்தப் பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளின் மனநிலை மற்றும் தொண்டர்களின் விருப்பத்தை கேட்டு அதன்படி திமுக கூட்டணியில் தொடர்வதா? அல்லது இல்லையா? என்பதுகுறித்து தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.

கொந்தளித்த துரை வைகோ
இதுமட்டுமல்லாது, மக்கள் பிரதிநிதி தன் கட்சியின் தலைமை எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பிற இயக்கங்களுக்குச் செல்வதோ அல்லது அரசியலை விட்டு ஒதுங்குவதோ அவரது விருப்பம், அது எப்படி கட்சித்தாவலாகும்? மதிமுகவில் இருந்துதான் கம்பம் ராமகிருஷ்ணன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவிற்கு சென்றார், அதேபோல் அதிமுகவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுதான் திமுகவிற்கு சென்றார் அதுவும் கட்சித்தாவலா? என கேள்வி எழுப்பினார் துரை வைகோ. மொத்தத்தில் பேச ஆரம்பித்ததுமுதல் பேச்சை முடிக்கும்வரை தவெகவிற்கு மறைமுக ஆதரவை அவர் அள்ளி வழங்கியது போன்றுதான் இருந்தது.

வருத்தம் வராதா?
தவெகவிற்கு செல்லும் அடுத்த விக்கெட் மதிமுகதான், இதுதான் மறைமுக சிக்னல்போல என பலரும் பேசிக்கொண்டிருக்க, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது மகன் பேசியது ஆதங்கத்தில்தானே தவிர அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை எனக்கூறி உள்ளார். திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கெல்லாம், அதிக இடங்களை கொடுத்துவிட்டு, தங்களுக்கு குறைவான இடங்களை ஒதுக்கினால் வருத்தம் வராதா? அதேபோல் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்தப்படுத்தினால் மதிமுக தோழர்களுக்கு ஆதங்கம் எழாதா? அதுவும், உங்கள் சின்னத்திலேயே களம் காணலாம் எனக்கூறி விட்டு கடைசி நேரத்தில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்தப்படுத்தினால் அதனை ஏற்காமல் என்ன செய்வது? என வைகோ கேள்வி எழுப்பினார்.

கூடுகிறது பொதுக்குழு
தனது மகன் ஆதங்கத்தில் பேசிவிட்டதாக பாலிஷ் செய்த வைகோ கடைசியில் அவரே தனது ஆதங்கத்தைதான் கொட்டினார். திமுக ஆதரவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஒரு நன்றிகூட சொல்லவில்லை எனவும் ராஜ்யசபாவில் இடம் வாங்கிவிட்டு தற்போது தவெக அமைச்சரவையிலும் இடம்பிடித்த காங்கிரசுடன் மதிமுகவை ஒப்பிடுவதா? அதேபோல் ஆதரவு கொடுப்பதுபோல் கொடுத்து அமைச்சரவையில் இடம்பிடித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தங்களை எப்படி ஒப்பிட முடியும்? என பொங்கிய வைகோ, தனிச்சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே தங்களின் வருத்தம் என்றார். ஆனால் எதுவாயினும் தங்களது பொதுக்குழுவில் ஆற அமர பேசி முடிவெடுத்துதான் தங்களின் எதிர்கால அரசியல் அறிவிப்பு இருக்கும் எனக்கூறினார்.

எதிர்பார்க்கலாம்...
திமுக மீதான அதிருப்தியை முதல் நாளில் மகன் நேரடியாக தெரிவிக்க, மறுநாள் மகனின் மனக்குமுறலே மதிமுகவில் உள்ள தோழர்களின் சிறு ஆதங்கம்தான் என வைகோ பூசிமொழுக, இருவரின் பேச்சையும் கவனித்த பலரும் தந்தையின் பேச்சுக்கும் மகன் பேச்சும் பெரிய வித்தியாசமில்லை நூலளவு வித்தியாசம்தான் எனக்கூறுவதோடு பொதுக்குழுவிற்குபின் இவர்கள் அரசியல் முடிவில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.

Related Link
“கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?” - ஆ.ராசா அதிரடி

“கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?” - ஆ.ராசா அதிரடி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடக முதல்வரானார் டி.கே.சிவகுமார்

6
6 hrs 24 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved