Also Watch
Read this
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று, குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தவெக நிர்வாகிகள் இருவர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்று கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர்.
பெண் புகாரால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம, ஸ்ரீவைகுண்டம் அருகே தவெகவை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் தன்னை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை கிளப்பியதோடு, ஆளுங்கட்சி என்பதால் அரசியல் வட்டாரத்திலும் எதிரொலித்தது. தவெகவின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும், அவரது நண்பரும், ராமநாதபுரத்தை சேர்ந்த தவெக உறுப்பினருமான ஜெயபால் என்பவரும் அதே கட்சியை சேர்ந்த பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக சிறுக சிறுக பணத்தை கறக்கவே, அது பெருந்தொகையாக மாறியதாக சொல்லப்படுகிறது.

சமூக வலைதள வீடியோ வைரல்
இன்று நாளை என போக்கு காட்டியே கடந்த மூன்று மாதங்களாகவே அவர்கள் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அப்பணத்தை எப்படி வாங்குவது என தெரியாமல் விழி பிதுங்கி நின்ற அப்பெண், கெஞ்சியும் பார்த்திருக்கிறார், மிரட்டியும் பார்த்திருக்கிறார், ஆனால் அவர்கள் எதற்கும் மசியவில்லை. வேலைக்காக வேறொருவரிடம் கடன் பெற்றே இரு நிர்வாகிகளிடம் அப்பெண் பணத்தை கொடுத்த நிலையில், பணம் திருப்பி வராததால் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நச்சரித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் அப்பெண், இருவரையும் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். அது கை கொடுக்காத பட்சத்தில், இவர்களிடம் பணத்தை திரும்பி பெறுவது கடினம் என புரிந்து கொண்ட அப்பெண் கோட்டையில் உள்ள முதலமைச்சர் விஜயை சந்திக்க சென்ற நிலையில், அங்கும் முயற்சி பலனளிக்கவில்லை. அனுமதி கிடைத்தும் அமைச்சர்களை கூட சந்திக்க முடியாமல் போனதோடு, காவலர்கள் தன்னை தரக்குறைவாக நடத்தியதாக அப்பெண்ணே குற்றம்சாட்டி அதனை சமூக வலைதளப் பக்கத்திலும் வீடியோவாக வெளியிட்டார்.

கொடூரம் அரங்கேற்றம்
அந்த பெண் வீடியோ வெளியிட்டதால் பதறிப்போன இரு நிர்வாகிகள், வேலை வாங்கி தருகிறேன் என சமாதானம் பேசி அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. பின் அப்பெண்ணை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தங்க வைத்ததாக கூறப்படுகிறது. அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்த இரு காமுகன்களும் அபெண்ணை மயக்கமடைய வைத்ததோடு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரத்தை அரங்கேற்றியதாக சொல்லப்படுகிறது.

குற்றவாளிகள் கைது
அங்கேயே அப்பெண்ணை விட்டு விட்டு இருவரும் புறப்பட்டு சென்ற நிலையில், அவர் மயக்கம் தெளிந்து ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதனை தொடர்ந்து பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved