2026 சட்டமன்ற தேர்தலுக்கு 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து, முதல் ஆளாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளது திமுக. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதால், அப்போது தொகுதி பார்வையாளர்களாக பணியாற்றிய 134 பேருக்கும், 100 புது முகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பல முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவை நியமித்த திமுக, தற்போது 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே முதல் ஆளாக 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்த திமுக தலைமை, அதே போல 2026 சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்கியுள்ளது. பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல், வாக்காளர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 100 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர் அணி, மாணவர் அணி, சுற்றுச்சூழல் அணி, தொண்டர் அணி, மருத்துவர் அணிகளில் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு, தேர்தல் பார்வையாளர்களின் பணி சிறப்பாக அமைந்திருந்ததும் காரணம் என, அவர்களை அழைத்து விருந்தளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்ட பலருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என பேசியிருந்தார். அதன்படியே கடந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 134 பேருக்கு மீண்டும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சிலரை தவிர மற்ற அனைவருக்கும் தொகுதிகள் மாற்றி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் தற்போது நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்களோடு மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், முகவர்கள் அடங்கிய பட்டியலை அடுத்த ஆண்டு மே மாதம் திமுக தலைமையிடம் தொகுதி பார்வையாளர்கள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெற்றி இலக்காக வைத்துள்ள நிலையில், தொகுதி பார்வையாளர்கள் நியமனம் அதற்கான துவக்கம் என திமுக நிர்வாகிகள் சார்பில் கூறப்படுகிறது. மேலும், அணி பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பதவிகளிலும் மாற்றங்கள் வரும் என்றும் கூறப்படுகிறது.