Also Watch
Read this
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தலைநகரமாக தமிழ்நாடு மாற்றப்படும் என விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். தவெக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு நகரங்கள், புத்தாக்க மையங்கள், பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்டார்.

கன்னியாகுமரியில் விஜய்
கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது;
என் நெஞ்சில் குடியிருக்கும் கன்னியாகுமரி, காரைக்குடி மக்களுக்கு வணக்கம்.

அன்று காரைக்குடியில் என்னால் பேச முடியாமல் போனது. இப்போது, தவெக ஆட்சியின் சில திட்டங்களை அறிவிக்கிறேன். தவெக அரசு அமைந்தால், நம் ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் நலத்திட்டம் போய் சேரும். அதற்காக ஆதார் அட்டை போல தமிழகத்தில் ஒரு அடையாள அட்டை உருவாக்கப்படும். ஏஐ தரவுடன், லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள் இந்த அட்டை மூலம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையில்லை.

லஞ்சம் இருக்காது...
அரசு அலுவலகங்களில் நமக்கு ஒரு வேலை ஆக வேண்டுமானால், பல்வேறு இழுத்தடிப்பு செய்கிறார்கள். இதற்கு காரணம் லஞ்சம். இவ்வாறு வாங்கப்படும் லஞ்சம், அதிகாரிக்கு மட்டுமின்றி, அமைச்சருக்கும் செல்கிறது. தவெக ஆட்சியில் தமிழ்நாடு சேவை உறுதி திட்டம் உருவாக்கப்படும். ஆப் மூலமாக ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை இடைத்தரகர் இல்லாமல், லஞ்சம் இல்லாமல் பெறலாம். பட்ஜெட்டை ஒரு ஆவணமாக மட்டும் நமக்குத் தெரியும். அந்த நிதி எங்கே செல்கிறது? என நமக்கு தெரியாது. அது சிதம்பர ரகசியம் போல ஸ்டாலின் சார் ரகசியமாக உள்ளது.

ஏஐ நகரம், ஏஐ அமைச்சகம்
தவெக ஆட்சியில், இணையதளம் மூலமாக அரசின் திட்டங்களுக்கு மக்கள் ஆலோசனை வழங்கலாம், பட்ஜெட்டை கண்காணிக்கலாம். நாட்டின் ஏஐ தலைநகராக தமிழ்நாடு மாறும். தமிழகத்தில் முதல் ஏஐ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் ஏஐ நகரம் உருவாக்கப்படும். தவெக அரசின் கீழ் ஏஐ அமைச்சகம் உருவாக்கப்படும். தமிழகத்தில் நிதி இறையாண்மை கொண்ட மாநிலமாக மாற்றப்படும். நம் மாநிலத்தின் கடன் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது, இதனை மாற்ற வேண்டும். இதுபோன்ற ஆட்சி நமக்கு வேண்டும். இதுவரை நம்மை ஏமாற்றிய அனுபவசாலிகளின் ஆட்சி போதும்.
இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசி வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved