சமயபுரம் அருகே 10 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், ராஜஸ்தானை சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர். சென்னை, சவுகார்பேட்டையில் இயங்கி வரும் பிரபல தங்க ஆபரண விற்பனை நிறுவனத்தில், குணவந்த், மகேஷ், பிரதீப்கான் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்த மூன்று பேரும், செப்டம்பர் 8ஆம் தேதி, கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை காரில் எடுத்துக்கொண்டு, பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக சென்றனர். திண்டுக்கல்லில் விற்பனையை முடித்த மூன்று பேரும் மீதமுள்ள 10 கிலோ தங்க ஆபரணங்களுடன் செப்டம்பர் 13ஆம் தேதி, சென்னை நோக்கி பயணித்தனர். அப்போது, சமயபுரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூர் என்ற இடத்தில், டிரைவர் பிரதீப் கான் சாலை ஓரத்தில் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல், குணவந்த், மகேஷ், பிரதீப் கான் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கார் டிரைவர் பிரதீப் கான், ராஜஸ்தானை சேர்ந்த நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து கொள்ளை அடித்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, கார் டிரைவர் பிரதீப் கான் உள்பட ராஜஸ்தானை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மங்கிலால் தேவாசி, விக்ரம் ஜாட் ஆகியோரிடம் நகைகள் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, மும்பை to ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில், மத்தியப் பிரதேசம் நோக்கி சென்ற பேருந்தில், நகைகளுடன் தப்பிக்க முயன்ற மங்கிலால் தேவாசி, விக்ரம் ஜாட் இருவரையும் செந்வா சிட்டி போலீசார் உதவியுடன் தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ 432 கிராம் தங்க நகை, 3 லட்சம் பணம், நாட்டு துப்பாக்கி ஆகியவற்றையும் தமிழக போலீசார் பறிமுதல் செய்தனர்.