தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:தீர்மானம் 1: விவசாய நிலங்களை அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பரந்தூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். இதில் தவறும்பட்சத்தில், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியான போராட்டங்களை தவெக முன்னெடுக்கும். எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கை வைக்கும் எந்த அரசும், அதே எளிய மக்களால் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும் என்பதையும் இந்த தீர்மானத்தின் வழியே எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.தீர்மானம் 2: சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. சிறப்பு தீவிர திருத்தத்தை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மேற்கொள்ள கூடாது என தவெக வலியுறுத்துகிறது. அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக ஜனநாயகத்தை காக்கும் வகையில், சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம் 3: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியது போல, கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை இம்மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை இலங்கை திருப்பித் தரவும் தேவையான நடவடிக்கையை ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.தீர்மானம் 4: ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவ, சமூக நீதிக்கான அறநெறியை உலகிற்கே கற்றுக் கொடுத்த தமிழகம், வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது. அனைத்து சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம் 5: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் 6: ’அவுட்சோர்சிங்’ முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நேர்மையான முறையில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை தவெக மாநில மாநாடு வலியுறுத்துகிறது.இவ்வாறு 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.