Also Watch
Read this
பழனி முருகன் கோவில் திட்ட விழா பேனரில் தனது பெயர் இல்லாததால் அதிமுக எம்.எல்.ஏ. ரவி மனோகரன் ஒதுங்கி நின்றார். அதிமுக எம்.எல்.ஏ.விடம் வருத்தத்தை பதிவு செய்ததுடன் அதிகாரிகளை அழைத்து, அமைச்சர் ரமேஷ் கண்டித்தார்.

பழநியில் அமைச்சர் ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இன்று ஜூன் 8ஆம் தேதி காலை பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தார். பழநி - கொடைக்கானல் சாலையில் ரூ.53 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவு வாயில் மற்றும் மேற்கு ரத வீதியில் ரூ.52 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள ராக்கால நந்தவனத்தை அமைச்சர் எஸ்.ரமேஷ் திறந்து வைத்தார். இதையடுத்து, ரூ.100 கோடியில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.

அதிமுக எம்எல்ஏவிடம் வருத்தம்
இந்நிலையில், அமைச்சர் ரமேஷ் ஆய்வுக்கு வருவது குறித்தும், அலங்கார நுழைவு வாயில் மற்றும் நந்தவனம் திறப்பு விழா குறித்தும் பழநி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரனுக்கு தகவல் தெரிவிக்காதது குறித்து அவரது ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தனர்.

உடனே அமைச்சர் ரமேஷ், தமக்கு தரும் மரியாதையை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி எம்எல்ஏவுக்கும் தர வேண்டும் என கோயில் இணை ஆணையரிடம் கண்டிப்புடன் தெரிவித்தார். தொடர்ந்து, எம்எல்ஏ ரவிமனோகரனை சந்தித்து, அமைச்சர் ரமேஷ் வருத்தம் தெரிவித்து அவரை சமாதானப்படுத்தினார்.

பின்னர், ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று அமைச்சர் ரமேஷ் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், அன்னதான கூடம், உணவு தயாரிக்கும் கூடத்தை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.

பக்தர்களிடம் குறை கேட்பு
வின்ச் ரயிலில் செல்ல வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்து, பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பக்தர்கள் காத்திருக்கும் அறையில் நோய் பாதித்த நாய் இருந்ததை பார்த்து உடனே அப்புறப்படுத்த நகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து, பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய வின்ச் ரயிலை இயக்காதது குறித்தும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். பஞ்சாமிர்தம் தயாரிப்பு மையத்தை ஆய்வு செய்து தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம், விற்பனையாகும் பஞ்சாமிர்தம் குறித்தும் அமைச்சர் ரமேஷ் கேட்டறிந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved