Also Watch
Read this
Posted on: Oct 23, 2025 06:23 AM
By: Web Team

தொடர் மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி 21.27 அடி உயரமும், மொத்த கொள்ளளவு 2,926 மில்லியன் கன அடியும், நீர் வரத்து 1980 கன அடியாகவும் உள்ளது. நேற்று மதியம் முதல் மழை விட்டாலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், ஏரியின் நீர்மட்டம் வேகமாக
உயர்ந்து வருகிறது. நீர் மட்டம் 22 அடியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உபரி நீர் கூடுதலாக திறக்கப்பட்டது. 500 கன அடியாக சென்று கொண்டிருந்த உபரி நீரை தற்போது 750 கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால், மதகின் அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடிக்கும் வகையில், நீரானது ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது.
மழை விட்ட நிலையிலும், ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், உபரி நீரை அதிகரித்து திறக்கப்படுவதாகவும், ஏரியின் நீர்மட்டம் மேலும் உயரும் பட்சத்தில், கூடுதல் உபரி நீர் திறக்கப்படும் என்றும், அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், 21 அடிக்கு கீழ் ஏரியின் நீர் மட்டத்தை வைத்துக் கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved