நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் முழுக்க முழுக்க புரோக்கர்களின் ராஜ்ஜியம் நடந்து வருவதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. கோவில் நிர்வாகிகளை மிரட்டி சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என தங்களுக்கு வேண்டியவர்களை அத்துமீறி உள்ளே அழைத்து செல்வதாக கூறப்படும் நிலையில், நிர்வாகிகளை மிரட்டும் அளவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. பக்தர்கள் குவியும் திருவண்ணாமலைபஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாதாரண நாட்களில் குறைந்தது 3 மணி நேரமாவது காத்திருந்தால் மட்டுமே அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க முடியும். அதிலும் வார விடுமுறை மற்றும் பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சொல்லவே வேண்டாம். இதனால், வரிசையில் நிற்பதை தவிர்க்க நினைக்கும் சிலர், தடுப்புகளை தாண்டி அத்துமீறி செல்வதால் அடிக்கடி பக்தர்களுக்குள் சண்டை ஏற்படுவதோடு, கைகலப்பாக மாறிய சம்பவங்களும் நடந்ததுண்டு. மிரட்டும் புரோக்கர்கள்இப்படி கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும், அதனால் ஏற்படும் விபரீத சம்பவங்களையும் வீடியோ எடுத்து வைத்துக் கொள்ளும் புரோக்கர் கும்பல், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, பக்தர்கள் அடித்துக் கொள்வது, கழிப்பறை இன்றி சிரமப்படுவது போன்ற வீடியோக்களை எடுத்து கோவில் நிர்வாகம் சரியில்லை என கூறி வேண்டுமென்றே இணையத்தில் அவதூறு பரப்புவதும், அதன் மூலம் கோவில் நிர்வாகிகளை மிரட்டி தங்களுக்கு தேவையானதை பிரச்சனையின்றி முடித்து கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. காக்க வைக்கப்படும் பக்தர்கள்குறிப்பாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என அதிகளவு பணம் கொடுப்பவர்களை எந்த வரிசையிலும் நிற்க வைக்காமல், நேரடியாக மூலஸ்தானம் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைப்பதாக சொல்கிறார்கள். அதேபோல் சிறப்பு அபிஷேகம் செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் பதிவு செய்து ரசீது பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், புரோக்கர்கள் மூலம் செல்பவர்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்காம். ரசீது எதுவும் பெறாமல் கூடுதலாக பணத்தை மட்டும் புரோக்கர்களிடம் கொடுத்து சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்கலாம் என்றும், அவர்கள் தரிசனம் செய்து முடிக்கும் வரை வரிசையில் வரும் பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதாகவும் சொல்லப்படுவது அதிர வைக்கிறது.கடவுளுக்கே வெளிச்சம்இருக்கும் கஷ்டத்தை கடவுளிடம் இறக்கி வைக்கவே கோவிலுக்கு செல்லும் சாமானிய மக்கள், அங்கு புரோக்கர்கள் செய்யும் அட்டகாசத்தை கண்டும் காணாமல் சென்று விடுகின்றனர். இதனால் காவல்துறையாலும் முறையாக நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளது. இதனை சாதகமாக்கிக் கொண்டு கோவிலை முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் இடமாகவே மாற்றி வரும் இந்த புரோக்கர்கள் கூட்டம், எப்போது கோவிலை விட்டு விரட்டி அடிக்கப்படும் என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் சசிகுமார்.இதையும் பாருங்கள் - எஸ்.ஐ.ஆர். - கால அவகாசம் நீட்டிப்பு