Also Watch
Read this
சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், 189 தொகுதிகளை கைப்பற்றி திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என LOK POLL அமைப்பு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. திமுகவுக்கு 40 சதவீதத்திற்கு மேல் வாக்கு கிடைக்கும் என கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ள நிலையில், கருத்துக் கணிப்பு வெளியிட்ட நிறுவனத்தின் பின்னணி என்ன? லோக் போல் கருத்துக் கணிப்பு உண்மையாகி இருக்கிறதா?

அனல் பறக்கும் தேர்தல் களம்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுகவும், அரியணையில் அமர அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டிருக்க, இரு திராவிடகட்சிகளுக்கு த.வெ.க.வும் கடும் சவாலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் தான், லோக் போல் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கு வெற்றி
அந்த கருத்துக் கணிப்பில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 181 முதல் 189 தொகுதிகள் வரை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணி மொத்தமாக 40.1சதவீதம் வாக்குகள் கிடைக்கும் எனவும், அதிமுக - பாஜக கூட்டணி 38 முதல் 42 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் கணித்துள்ளது.

அதிமுக கூட்டணிக்கு...
மேலும், அதிமுக கூட்டணிக்கு 29 சதவீத வாக்குகள் கிடைக்கும் என அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு, களத்திற்கு புதிதாக வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 8 முதல் 10 எம்.எல்.ஏ. சீட்டு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது எனவும், த.வெ.க.வுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் 23.9 அதாவது 24 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதோடு, நாம் தமிழர் கட்சிக்கு வழக்கம் போல ஒரு எம்.எல்.ஏ. சீட்டு கூட கிடைக்காது என்பதோடு, அந்த கட்சியின் வாக்கு வங்கி 4.9 சதவீதமாக இருக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தவெக வருகையால் சேதாரம்
2021 தேர்தலில் திமுக கூட்டணி 45.38 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், கடந்த முறையை விட இந்த முறை திமுகவில் கூடுதல் கூட்டணி கட்சிகள் சேர்ந்திருக்கின்றன. இருப்பினும் கூட, வருகிற தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகள் 40 சதவீதம் என்றே கணிக்கப்பட்டுள்ளது. புதிதாக வந்திருக்கும் த.வெ.க.வின் வாக்கு சதவீதம் முதல் தேர்தலிலேயே 24 சதவீதமாக இருக்கும் என கணித்திருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் 8 சதவீதம் வரை உயர்ந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி சரி பாதியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில், புது வரவான த.வெ.க. மூலம் களத்தில் ஏற்கனவே இருக்கும் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு சேதாரம் வரும் என்பதையே இந்த கருத்துக் கணிப்பு உணர்த்தியுள்ளது.

பீகாரில் என்ன நடந்தது?
இது ஒரு பக்கம் இருக்க, லோக் போல் அமைப்பு வெளியிட்ட கடந்த கால கருத்துக் கணிப்பு குறித்தும் அலச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகாரில் நடந்த சட்டமன்ற தேர்தல் நாடே உற்று நோக்கும் தேர்தலாக இருந்தது. இந்த தேர்தலில் NDA கூட்டணி தோல்வியை தழுவி, காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை
பிடிக்கும் என லோக் போல் அமைப்பு கருத்துக் கணிப்பு வெளியிட்டது. காங்கிரஸ் - RJDயின் மகாகத்பந்தன் கூட்டணி 118 முதல் 126 இடங்கள் பெற்று ஆட்சி அமைக்கும் என லோக் போல் அமைப்பு கருத்துக் கணிப்பில் கூறப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் அப்படியே தலைகீழாக தான் வந்தது. NDA கூட்டணி தான் 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி ஆட்சியை
பிடித்தது. மகாகத்பந்தன் கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்தது. காங்கிரசுக்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே வெற்றி கிடைத்தது.

கருத்துக் கணிப்புக்கு எதிராக...
2024ஆம் ஆண்டு நடந்த ஹரியானா தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என லோக் போல் அமைப்பு கருத்து கணிப்பு வெளியிட்ட நிலையில், அதற்கு மாறாக பாஜக மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. அதேபோல, கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என லோக் போல் அமைப்பு கூறிய நிலையில், பாஜக ஆட்சியை பிடித்து, காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் தள்ளப்பட்டது. மேலும், 2023-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச தேர்தலிலும் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியாக, யாருமே எதிர்பார்க்காத விதமாக பாஜக 160க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று இமாலய வெற்றியை பதிவு செய்தது. லோக் போல் நிறுவனத்தின் சமீபத்திய கருத்துக் கணிப்புக்கு எதிராகவே தான் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved