Also Watch
Read this
17ஆவது சட்டப்பேரவையின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வான ஜே.சி.டி.பிரபாகரை செங்கோட்டையனுடன் இணைந்து கையை பிடித்து அழைத்து சென்று இருக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அமர வைத்தார். துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரவிசங்கரை எழுந்து நின்று வாழ்த்தி, முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய், மே 10ஆம் தேதி பொறுப்பு ஏற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அனைவருக்கும், ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிர மாணம் செய்து வைப்பதற்காக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கருப்பையா தேர்வு செய்யப்பட்டார்.

சபாநாயகர், துணை சபாநாயகர்
இதனை தொடர்ந்து, நிரந்தர பேரவைத் தலைவர் பதவிக்கு தவெக சார்பில் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவான ஜேசிடி பிரபாகர், பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் விஜய், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவிக்கு துறையூர் தொகுதி எம்எல்ஏவான ரவிசங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

போட்டியின்றி தேர்வு
எதிர்க்கட்சிகள் தரப்பில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வராததால், பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் ஆகியோர் இன்று மே12ஆம் தேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் தேர்வு செய்யப்பட்டதும், அவரை அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து பேரவைத்தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.

அனைத்துக்கட்சி தலைவர்கள் வாழ்த்து
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், துணை சபாநாயகராக ரவிசங்கர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவை உறுப்பினர்கள் சபநாயகர், துணை சபாநாயகருக்கான வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved