Also Watch
Read this
சபாநாயகர் பதவி உருவானது பற்றி சட்டப்பேரவையில் குட்டி ஸ்டோரி சொன்ன முதலமைச்சர் விஜய், நகைச்சுவை கலந்த கதையை கேட்டு, அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்த சுவாரசியம் நிகழ்ந்தது.
இங்கு அனைவரும் சமம்
சபாநாயகர் பொறுப்பேற்ற ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் துணை சபாநாயகரை வாழ்த்து முதல்வர் விஜய் பேசியதாவது;
மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி என்றார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன். அதிக மக்கள் அதிக நன்மைகளை இந்த ஆட்சிக்காலத்தில் பெற்றுள்ளார்கள் என்னும் அளவுக்கு நம்முடைய செயல்பாடு அமைய வேண்டும். இங்கு அனைவரும் சமம். ஒரு உறுப்பினரை கொண்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் அவர்களுடைய கருத்துக்களும், அதிக உறுப்பினர்களை கொண்ட தவெக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் சமமாகவே மதிக்கப்பட வேண்டும்.

ஒருமனதாக சபாநாயகர் தேர்வு
இதற்குரிய வகையில் பேரவையை நடத்திச் செல்லக்கூடியவரையே தவெக முன்மொழிந்துள்ளது. பேரவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவரை பேரவை முன்னவரும், எதிர்கட்சி தலைவரும் தங்கள் கரங்களை பிடித்து இருக்கையில் அமரவைத்தனர்.

குட்டி ஸ்டோரி
இந்த நடைமுறை எப்படி வந்தது என்றால், இங்கிலாந்து நாடாளுமன்ற நடைமுறைகளை போன்றது நம்முடைய நடைமுறை. மன்னராட்சி இருந்த காலத்திலேயே அங்கு நாடாளுமன்றம் இருந்தது. அங்கு மன்னர் ஒன்றை செய்ய விரும்புவார். ஆனால், அதை நாடாளுமன்றம் பெரும்பாலும் நிராகரித்து விடும். அதை மன்னரிடம் தெரியப்படுத்துபவரே நாடாளுமன்ற சபாநாயகர். அதற்கு மிகுந்த துணிவு வேண்டும். மன்னருக்கு சில பணிகளை செய்வதற்குதான் நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். தான் நிறைவேற்றியதை நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது என்று சொல்லும் சபாநாயகருக்கு மரண தண்டனை விதிக்குமாறு கூட மன்னர் ஆணையிடுவார். அதனால் இந்த சபாநாயகர் பதவிக்கு யாரும் வரமாட்டார்கள்.

ஓடிவிடுவார் சபாநாயகர்
ஆகவே, புதிய நாடாளுமன்றம் அமையும்போது சபாநாயகர் பதவிக்கு ஒருவரை அறிவிக்கும்போது அவர் தலை தப்பித்தால் போதும் என்று ஓடிவிடுவார். அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் அவர் கையைப் பிடித்து இழுத்துவந்து ஆசனத்தில் அமரவைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்த மரபு. ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இம்மரபு தொடர்கிறது. நிச்சயமாக தவெக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய், பேசிய உடன் சட்டப்பேரவை கலகலப்பாக மாறியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved