Also Watch
Read this
ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் விஜய், சீமான் எனக் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாக, திருமாவளவன் திட்டவட்டமாக கூறி உள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து விடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

யாரும் பேசவில்லை
சென்னையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது;
திமுக, அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக யாரும் பேசவில்லை. இதுதொடர்பாக பல இடங்களில் கிசுகிசுப்பாக பேசப்பட்டது என்றுதான் கூறினேன். தனி நபர்கள் யாரும் என்னிடம் இதுபற்றி பேசவில்லை. எனக்கு இதுபற்றி தகவல் வந்தபோது, இப்படி பேசுவதே தவறு என்றுதான் கூறினேன். திமுக கூட்டணியில் தான் நாங்கள் உள்ளோம். திமுக தலைவரை எப்போது வேண்டுமானாலும் சந்திப்போம்.

முதல்வர் ஆக முடியுமா?
திமுக - அதிமுக கூட்டணி குறித்து இடையில் உள்ள சிலர் என்னிடம் பேசினர். ஆனால், இந்தக் கூட்டணி குறித்து சம்மந்தப்பட்ட கட்சிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் என்னிடம் பேசவில்லை. ஏன் ஒரு தலித் முதல்வராக கூடாது என்று, சில நலம் விரும்பிகள் என்னிடம் கேள்வி எழுப்பினர். இது சரியான அணுகுமுறை இல்லை என கூறிவிட்டோம். திமுக கூட்டணியில் இருந்தாலும், தவெக ஆட்சியமைப்பதில் தவறில்லை என்ற நிலைப்பாட்டை நாங்கள் தொடக்கத்திலேயே எடுத்துவிட்டோம்.

முதல்வர் ஆக முடியாது
சமூக நீதி மண், பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகம் சாதிய இறுக்கத்திலிருந்து இன்னும் விடுபடாத மாநிலம். இங்கே அவ்வளவு இலகுவாக தலித், முதல்வராக முடியாது. நான் 40 ஆண்டுகள் அரசியலில் உள்ளேன், இங்கே கள யதார்த்தம் என்னவென்று எனக்கு தெரியும். எனவே, யாரோ சொன்னார்கள் என்பதற்காக கற்பனையாக நான் வாழ மாட்டேன்.

ஆட்சி அமைக்க ஆதரவு
தவெக ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு அளித்து உள்ளோம். இரு எம்எல்ஏக்களால் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விடக் கூடாது, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது, மறுபடியும் ஒரு தேர்தல் வந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் ஆதரவு அளித்தோம். விசிக ஆதரவு அளிக்காததால் தவெகவால் ஆட்சியமைக்க முடியாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்து விடக் கூடாது என்பதற்காகவே ஆதரவு அளித்தோம்.

அமைச்சரவையில் இடம்
வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம், அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என்று, ஏற்கெனவே கூறிவிட்டோம். எங்கள் கட்சியின் சிலர், அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று, இப்போதும் கூறிக் கொண்டு உள்ளனர். ஆனாலும், கட்சி தலைவராக நான் எடுத்த முடிவை அனைவரும் ஏற்பார்கள்.

பேரம் எதுவும் நடக்கவில்லை
இடதுசாரிகள் அறிவித்த உடனே நீங்கள் ஏன் அறிவிக்கவில்லை? என்று கேட்கின்றனர். எங்கள் கட்சிக்குள் உயர்நிலைக் குழுவில் விவாதம் செய்தே முடிவை அறிவித்தோம். தவெக உடன் எந்த பேரமும் நடத்தவில்லை என்பதே உண்மை. எங்களுக்கு பதவி ஆசை இருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு முன்னரே தவெகவுக்கு ஆதரவு அளித்திருப்பேனே?

ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைகள்
அதிமுகவை ஊழல் கட்சி என்று, விஜய் கூறினார். அதிமுக இப்போதும் பாஜகவோடு தீவிர நட்போடு இருக்கிற கட்சி. அந்தக் கட்சியை சார்ந்த சிலர், அந்தக் கட்சியை உடைத்துக்கொண்டு தவெக அரசுக்கு ஆதரவு தருவது குறித்து, எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் கலந்து பேசுவோம். ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைகள் விஜய்யும், சீமானும் என்று நான் தேர்தலின் போது விமர்சனம் வைத்தேன். ஆதரவளிக்கும் போதும் அதனை நான் ஆதவ் அர்ஜுனாவிடம் கூறிவிட்டேன்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved