வாணியம்பாடி அருகே பள்ளி மாணவியை பேருந்தில் ஏற்றி செல்லாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து கழக மேலாளர் பணியிடை நீக்கம் செய்ய அதிரடி உத்தரவிட்டுள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் முதல் ஆலங்காயம் வரை அரசு பேருந்துகள் சென்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு வந்த 1 C எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டுநர் முனிராஜ் என்பவர் ஓட்டி வந்த நிலையில், அதில் நடத்துநராக அசோக் குமார் என்பவர் இருந்துள்ளார். பேருந்து வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் போது வேப்பமர சாலை என்ற இடத்தில் மாணவர்களை ஏற்றாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த இளைஞர் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது பேருந்து கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. அங்கு கடைசி தேர்வுக்காக பள்ளிக்கு செல்ல 12 ஆம் வகுப்பு மாணவி பேருந்துக்காக காத்திருந்த நிலையில், நிற்காமல் சென்ற பேருந்தை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பேருந்தை பிடிப்பதற்காக அதற்கு பின்னால் வேகமாக ஓடிச் சென்றுள்ளார்.சிறிது தூரத்தில் ஓட்டுநர் முனிராஜ் மாணவி வருவதைக் கண்டு பேருந்தை நிறுத்தியுள்ளார். பின் பேருந்தில் ஏறிய மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத சென்றுள்ளார்.இந்நிலையில், மாணவி பேருந்துக்கு பின்னால் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில் பேருந்து ஓட்டுநர் முனிராஜ் மற்றும் நடத்துனர் அசோக்குமாரை பணியிடை நீக்கம் செய்ய போக்குவரத்து பணிமனை மேலாளர் கணபதி உத்தரவிட்டுள்ளார்.