Also Watch
Read this
By: Web Team

பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும், நீக்கத்துக்கான காரணத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், இ.கம்யூ., ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, நடைபெற்ற விவாதம்:
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷோப் ஆலம்:
இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் சட்டத்துக்கோ, விதிகளுக்கோ உட்பட்டு நடத்தப்படவில்லை. வாக்காளர்களில் பலர் படிக்காதவர்கள். அவர்களிடம், இந்திய குடிமகன் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி:
சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என மனுதாரர் கூறுகிறார். வாக்காளர் பட்டியலை தயாரிக்கவும், அதை முறைப்படுத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்காளர்களை வெளியேற்றும் நோக்கத்துடன் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. உயிரிழந்தவர்கள் என பட்டியலில் அறிவிக்கப்பட்ட பலர் உயிருடன் இருப்பதாக சிலர் கூறி இருக்கிறார்கள். இதை அடுத்து, அத்தகையோரை பட்டியலில் இணைக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தங்கள் இடைக்கால உத்தரவில் கூறியதாவது:
சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் வெளியிட வேண்டும். தங்கள் பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை வாக்காளர்கள் அறிய வேண்டும். ஆய்வு முடிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வரும் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்குள் மாவட்ட அளவில் வெளியிட வேண்டும்
இவ்வாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved