Also Watch
Read this

மேற்காசிய நாடுகளில் நீடிக்கும் போர் காரணமாக வங்கதேசத்தில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் வெளியே பல அடி தூரத்திற்கு வரிசை கட்டி நிற்கும் வாகனங்களால், பொது மக்கள் அவதி அடைந்தனர்.

உற்பத்தி பாதிப்பு
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த போர், தொடரும்... என்ற சூழல் நிலவுகின்ற காரணத்தால், ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 90 டாலர்களைக் கடந்துள்ளது.
சரியாக ஒரு வாரம்... அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரானை தாக்கின. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

விநியோகம் முடக்கம்
இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டுள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து முழுமையாக முடங்கி உள்ளது. சுமார் 3,200க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் ஜலசந்தியின் இருபுறமும் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் கடந்த ஒரு வார காலமாக கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்படும்.
கச்சா எண்ணெய் விலையும் ஏற்றம்
இந்த போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 90 டாலர்களை கடந்தது. ஒரே நாளில் சுமார் 12.21 சதவீதம் விலை ஒரு பேரலுக்கு உயர்ந்தது. கடந்த 2020 ஏப்ரலுக்கு பிறகு, கச்சா எண்ணெயின் வாராந்திர விலையும் ஏற்றம் கண்டது. போர் தொடர்ந்தால் இந்த விலை மேலும் உயரும் என கூறப்படுகிறது.

பெட்ரோல் தட்டுப்பாடு
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சப்ளை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்குள்ள பெட்ரோல் பங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved