பொழுதுபோக்கு அம்சங்களில் தற்போது முக்கிய பங்கினை வகிப்பது திரைப்படங்கள் தான். அந்த வகையில் பொழுதுபோக்கையும் தாண்டி சிலர் திரைப்படம் பார்ப்பதையே ஹாபியாகவே வைத்துள்ளனர்.இந்நிலையில் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ்((Found Footage)) ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். இதனையடுத்து எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள, இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்ற நிலையில் தற்போது திரைப்படம் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போஸ்டர் மற்றும் பேனர்கள் ஒட்டி உள்ளதாக கூறப்படுகிறது. போஸ்டர்கள் குறிப்பாக பேருந்து நிலையம் பள்ளிகள் அருகே, மற்றும் மருத்துவமனை போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் உள்ள புகைப்படம் மக்களை அச்சுறுத்தும், அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாகவும், ரத்த காயங்களுடன் துண்டான தலை அந்தரத்தில் தொங்குவது போலவும் இருப்பதால் அச்சத்துடன் கண்டு செல்வதாக கூறப்படுகிறது.போஸ்டரில் கர்ப்பிணி பெண்கள், இதயம் பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என அச்சிடப்பட்டு இருந்தும் அவைகளை மருத்துவமனை முகப்பில் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் வந்து செல்லும் சூழலில் வைத்திருப்பதாகவும், அதேபோல் அதில் வரக்கூடிய காட்சிகளை வயதிற்கு ஏற்ப பார்க்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் தற்போது சிறுவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் பார்க்கும் வகையில் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் புலம்பியபடி கடந்து செல்கின்றனர்.இதையும் படியுங்கள் : சிம்ஃபொனி இசை மட்டுமல்ல.. இளையராஜாவும் இந்தியாவுக்குப் பெருமை.. பா.ம.க. தலைவர் புகழாரம்