திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் மின்னல் வேகத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றன. கொட்டும் மழைக்கு நடுவிலும் மாமல்லன் என்ற ராட்சத கிரேன் களமிறக்கப்பட்டு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நிலையில், கவரப்பேட்டை முழுவதும் ரயில்வே, காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து சுமார் 1,600 பயணிகளுடன் தர்பங்கா நோக்கி வந்துக்கொண்டிருந்த பாக்மதி அதிவிரைவு ரயில் சரியாக 8.15 மணிக்கு பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்த போது சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் சிதறின. பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்றாகவும், குறுக்கும் நெடுக்குமாக சிதறிக் கிடந்தன. பாக்மதி அதிவிரைவு ரயில் மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைன் என்று சொல்லக்கூடிய சரக்கு ரயில் நிறுத்தி வைத்திருந்த வழித்தடத்தில் தடம் மாறி சென்றதே விபத்துக்கு காரணமாக கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முதல்கட்டமாக மூன்று Tata Hitachi EX 210LC கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. அவை 20 டன் எடையை மட்டுமே தூக்கக்கூடிய திறன் பெற்றிருந்ததால் 40 முதல் 50 டன் எடை கொண்ட பெட்டிகளை தூக்கி அப்புறப்படுவதில் சிரமம் ஏற்பட்டது. மூன்று Tata Hitachi EX 210LC கிரேன்களின் திறன்களையும் ஒன்றிணைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் தடம் புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்துவது பெரும் பாடாய் போனது...இதையடுத்து, கிரேன்களின் அரக்கன் என்று சொல்லக்கூடிய மாமல்லன் கிரேன் களத்தில் இறக்கப்பட்டது. 140 டன் எடையையும் அசால்டாக தூக்கக்கூடிய அதீததிறன் பெற்ற மாமல்லன் கிரேன் தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கவரப்பேட்டை-க்கு வரவழைக்கப்பட்டது.விபத்தில் சிக்கி தடம்புறளும் ரயில் பெட்டிகளை மீட்பதற்கென்றே பிரத்தியேகமாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது தான் மாமல்லன். பொதுவாக ரயில் பெட்டிகள் 50 டன் வரை எடை இருக்கும் என்ற நிலையில் சில நேரங்களில் பல டன் எடையிலான சரக்குடன் தடம் புறளும் பெட்டிகளையும் அகற்றுவதற்கு ஏதுவாக ஹைட்ராலிக் முறையில் வடிவமைக்கப்பட்டது தான் மாமல்லன் கிரேன்.