சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், திமுக இன்னும் தொகுதி பங்கீட்டுக்கு குழு அமைக்காமல் இருப்பது காங்கிரஸ் மேலிடத்தை வருத்தம் அடையச் செய்திருக்கிறது. காங்கிரஸ் மேலிடத்தின் அதிருப்தியை அடுத்து வரும் 22ஆம் தேதி முதல் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தும் என்று, திமுக தலைமை அறிவித்து சமாதான புறாவை பறக்க விட்டுள்ளது. கூட்டணியில் நீடிக்குமா? இல்லையா? சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்று, வேக வேகமாக இறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அண்ணா அறிவாலயம் பக்கம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அறிகுறியே இல்லாமல் இருந்தது. திமுக கூட்டணியில் முதல் ஆளாக காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை குழுவை அமைத்து அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்தது. கடந்த டிசம்பர் மாதம் கிரிஷ் ஜோடங்கர் தலைமையிலான குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது. அந்த சந்திப்பு நிகழ்ந்து கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால், இன்னும் திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் காங்கிரஸுக்கு கொடுக்கவில்லை. இதனிடையே, காங்கிரஸ், திமுக கூட்டணியில் நீடிக்குமா? இல்லையா? என்ற விவாதமும் எழுந்து வருகிறது. காங்கிரஸில் சிலர் த.வெ.க. கூட்டணியை விரும்பும் நிலையில், அதுவும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.காங்கிரஸ் கட்சி வருத்தம் இந்த சூழலில் தான், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர்களை, ராகுல்காந்தி சந்தித்து பேசும் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை அமைக்க திமுகவை வலியுறுத்தவேண்டும் என கோரிக்கை முன் வைத்ததாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருக்கிறது என்பதால் விரைவிலேயே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும் என திமுகவை கேட்டுக் கொண்டார். திமுக காலம் தாழ்த்தி வருவது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில்வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் செல்வபெருந்தகை கூறினார்.தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், காங்கிரஸின் பேச்சுவார்த்தைக் குழு அறிவாலயம் சென்று வந்து 70 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால், இன்னும் திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் வராதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். திமுக - காங்கிரஸ் இடையேயான உறவில் கசப்புகாங்கிரஸ் - தி.மு.க இடையிலான கூட்டணி என்பது 2004ஆம் ஆண்டு முதல் இப்போது வரை நீடித்து வருகிறது. அதில் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சி தனித்து நின்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியும், அகில இந்திய அளவில் பா.ஜ.க.வின் எழுச்சியும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தி.மு.க பக்கம் கொண்டு வந்தது. ஆனால், சமீப காலமாக திமுக - காங்கிரஸ் இடையேயான உறவில் கசப்பு தட்டியிருக்கிறது. ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் பேச தொடங்கியதில் இருந்து அந்த கசப்புணர்வு ஏகத்திற்கும் மேலோங்கியுள்ளது. ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களாக அறியப்படும் பலரும் த.வெ.க. ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதும், திமுக உடனான கூட்டணி உறவுக்கு சிக்கலாக அமைந்தது. தற்போதைக்கு திமுக கூட்டணியை விட்டு விலகும் முடிவில் காங்கிரஸ் இல்லை என்றாலும், குழு அமைக்காமல் திமுக இழுத்தடித்து வருவது காங்கிரஸுக்கு கௌரவ குறைச்சலாக இருந்தது. கனிமொழி, ராகுல்காந்தி சந்திப்புசமீபத்தில் கூட திமுக எம்.பி., கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து விட்டு வந்த நிலையில், அந்த சந்திப்பிலும் கூட சீக்கிரம் குழுவை அமைக்க வேண்டும் என்று தான் ராகுல் காந்தி வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகும் திமுக சுணக்கம் காட்டிய நிலையில் தான் டெல்லி மீட்டிங்கிற்கு பிறகு வெளிப்படையாக வருத்தத்தை கொட்டியிருக்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தைகாங்கிரஸ் நிர்வாகிகளின் வெளிப்படையான பேட்டியை அடுத்து, நீண்ட நெடிய விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக, விரைவில் குழு அமைக்கப்பட்டு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்து காங்கிரஸை சமாதானப்படுத்தியிருக்கிறது. Related Link ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,800