பேடிஎம் யூசர்களுக்கு தங்கம் கிடைக்க போகிறது. அதாவது பேடிஎம் மூலம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்கத்தை கொடுக்கும் சூப்பர் திட்டத்தை பேடிஎம் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், பேடிஎம் மூலம் அதை பெறுவது எப்படி என்று விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.இந்தியாவின் மூலை, முடுக்கெல்லாம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வளர்ச்சி அடைந்துள்ளது. டீக்கு கூட பணமாக செலுத்தாமல் யுபிஐ பயன்படுத்தி வருகின்றனர். எங்கு சென்றாலும் பணம் தேவையில்லை, கையில் ஸ்மார்ட் ஃபோன் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு டிஜிட்டல் இந்தியா வளர்ந்துள்ளது. இந்த அளவுக்கு மக்களிடம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை கொண்டு சேர்த்த பெருமை் பேடிஎம் நிறுவனத்துக்கே உண்டு. தற்போது பேடிஎம்-க்கு போட்டியாக கூகுள் பே, ஃபோன் பே மற்றும் வங்கி பண பரிமாற்ற செயலிகள் வந்துள்ளன. இதனால், தனது பயனர்களை தக்க வைத்து கொள்ள நினைத்த பேடிஎம், ஸ்மார்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது பேடிஎம் செயலி மூலம் யாருக்காவது பணம் அனுப்பினாலோ, ஆன்-லைனில் பொருட்கள் வாங்கிவிட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தினாலோ, ரீசார்ஜ் செய்தாலோ, பில்களை கட்டினாலோ ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயம் வந்து சேரும் என பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. இது எப்படி சாத்தியம்? ஒரு பயனர் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனையில் ஒரு சதவீத தொகை தங்க நாணயத்தின் கணக்கில் சென்று சேர்ந்து விடும் என கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஒருவர் ஆயிரம் ரூபாய் பணத்தை பேடிஎம் மூலம் அனுப்பி வைத்தால் அதில் 10 ரூபாய் கோல்ட் காயின் திட்டத்தில் சென்று டிஜிட்டல் கோல்ட் காயினாக மாறி விடும். இது, அந்த பயனரின் கணக்கில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் அந்த தொகைக்கு ஏற்ப ஒரு சதவீத தொகை தங்க நாணயத்தில் சேர்ந்து கொண்டே செல்லும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனையில் இரட்டிப்பு மடங்கு பணம் கோல்ட் காயினாக சேரும் என கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினால் அதில் 2 சதவீதம் அதாவது 20 ரூபாய் கோல்ட் காயின் திட்டத்தில் சேரும். இப்படி ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் டிஜிட்டல் கோல்ட் காயினாக சேரும் தொகையை பணமாக மாற்றி எடுத்துக் கொள்ளலாம் அல்லது தங்கமாக எடுத்துக் கொள்ளலாம் என பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் இந்த கோல்ட் காயின் திட்டம் அதன் பயனர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.