Also Watch
Read this
Posted on: Jan 29, 2026 12:42 PM
By: Manigandan Raja
சென்னையில், பீகார் இளைஞரின் குடும்பம் படுகொலை, அரசுக் கல்லூரி கேண்டீனில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காக வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக, வேதனை தெரிவித்துள்ள விஜய், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு வலியுறுத்தி உள்ளார்.
விஜய் வெளியிட்ட பதிவு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
அதிர்ச்சி, வேதனை
சென்னை, அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.
சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல்
இதனால் தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதல்வர், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.
இவ்வாறு விஜய் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved