Also Watch
Read this
Posted on: Mar 21, 2026 03:31 PM
By: Manigandan Raja

இஸ்ரேலின் வடக்குத் துறைமுக நகரமான ஹைஃபாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஆலையில் புகை மண்டலம் சூழ்ந்துள்ள நிலையில், பெரியளவு சேதம் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
இந்த ஆலை அந்நாட்டின் 60 சதவீத டீசல், 50 சதவீத பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்து வருவதாகும்.
ரூ.1.80 லட்சம் கோடி இழப்பு :
ஈரான் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கத்தாரின் Ras Laffan LNG ஆலையை சரி செய்ய 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என Qatar Energy நிறுவனம் வேதனை தெரிவித்து உள்ளது.
இதனால், கத்தாரின் வருடாந்திர LNG உற்பத்தி திறன் 17 சதவீத முடங்கும் என்றும், 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு நாடுகளுடனான LNG ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.
அமெரிக்கா அதிரடி :
கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தடுக்க, ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க திட்டமிட்டு உள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்து உள்ளார்.
உலகளாவிய எரிசக்தி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதால், ஈரானுக்கு எதிரான தனது பல ஆண்டுகால பொருளாதார தடை கொள்கையில் சமரசம் செய்ய அமெரிக்கா முடிவு செய்து உள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதையும், விலைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதையும் இந்த நடவடிக்கையை நோக்கமாகக் கொண்டு உள்ளது என்று, அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.
அமெரிக்காவை அதிர வைத்த ஈரான் :
உலகின் அதி நவீன மற்றும் கண்ணுக்குப் புலப்படாத போர் விமானம் என்று கூறப்படும், அமெரிக்காவின் F-35 சூப்பர்சோனிக் விமானத்தை தாக்கி ஈரான் அதிர வைத்து உள்ளது.
போரில் ஈடுபட்டிருந்த F-35 விமானம் தாக்குதலுக்கு உள்ளானதில் சேதம் அடைந்ததாகவும், மத்திய கிழக்கில் உள்ள ஒரு அமெரிக்க விமானப் படை தளத்தில் அவசரமாகத் தரை இறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் :
லெபனானில் தாக்குதல் தொடர்பாக செய்தியாளர் களத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்த போது, அவர் அருகே இஸ்ரேல் வானில் இருந்து குண்டு வீசிய சம்பவத்தின் பதைபதைப்பூட்டும் காட்சி வெளியாகி உள்ளது.
ரஷ்ய செய்தியாளர் ஸ்டீவ் ஸ்வீனியும், அவரது ஒளிப்பதிவாளர் அலி ராடாவும் வீடியோ எடுத்து பேசிக்கொண்டு இருந்தபோது, அவர்கள் இருந்த இடத்தில் இருந்து பத்து மீட்டருக்கும் குறைவான தூரத்தில், இந்தத் குண்டு விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இழப்பீடு கோரும் ஈரான் :
தங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க படைகளுக்கு தனது மண்ணைப் பயன்படுத்த அனுமதி அளித்ததாக குற்றம்சாட்டி, ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஈரான் அரசு, இழப்பீடு கோரி உள்ளது.
இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், ஈரானில் ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் இழப்பீடு வழங்குவது ஐக்கிய அரபு அமீரகத்தின் பொறுப்பு என்றும், ஐக்கிய அரபு அமீரகத்தின் நடவடிக்கையை ஈரான் சட்ட மீறலாக கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் மீது 64ஆவது முறையாக ஈரான் தாக்குதல் :
மேற்கு ஆசியாவில் 20ஆவது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் மீது 64ஆவது முறையாக ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டதால், அதுகுறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, ஜெருசேலம் பகுதியில் சைரன்கள் ஒலித்தன.
பிரிட்டன், பிரான்ஸ் கண்டனம் :
ஈரான் மற்றும் கத்தாரில் உள்ள எரிவாயு நிலையங்கள் மீதான தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக, ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறி உள்ளார். தாக்குதல் தொடர்பாக கத்தார் மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோருடன் பேசியதாகவும், பொது மக்களின் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி விநியோக தளங்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தி உள்ளார்.
மோதலைத் தவிர்க்கவும், எரிசக்தி பாதுகாப்பைப் பேணவும் அவர் அழைப்பு விடுத்தார். கத்தாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு கட்டமைப்பின் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் அசாதாரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பிரிட்டன் அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேரில் வந்த நெதன்யாகு :
ஈரான் போரின்போது உயிரிழந்ததாக பரவிய வதந்திகளுக்கு மத்தியில் முதல்முறையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலில் தான் ஒன்றைச் சொல்ல விரும்புவதாகவும், தான் உயிருடன் இருக்கிறேன், தாங்கள் அனைவரும் அதற்குச் சாட்சி என்றார்.
ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்கா மிகவும் கடினமாக உழைத்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். மேலும், தங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் அவர்களுக்கு உதவ முயற்சிப்பதாகவும், அவர்கள் வெற்றி பெற்றால், எண்ணெய் விலை குறையும் என்று தான் நம்புவதாகவும் நெதன்யாகு கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved