திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த நிலையில், 2 மணிநேரம் ஸ்மார்ட்டாக செயல்பட்டு பயணிகளை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனப் பலரும் நெகிழ்ந்து வருகின்றனர். எந்த அசம்பாவிதமும் நிகழ்ந்து விடக்கூடாது, அதேசமயம் பயணிகளும் பதற்றமடையாமல் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டிய விமானிகளின் செயல்பாடு.ஆயுத பூஜையையொட்டி பூஜைபோட்டு வெடி வெடித்து கொண்டாடியபோது விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானில் வட்டமடிப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைக்க.. அடுத்தநொடியே அசுரவேகத்தில் ஆம்புலன்ஸ்களோடு பறந்து சென்றனர் ஓட்டுநர்கள்.. திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சக்கரம் உள்ளே செல்லவில்லை. புறப்பட்ட 20 நிமிடத்திலேயே இதனையறிந்த விமானி, விமானநிலையத்துக்குத் தகவல் கொடுத்துவிட்டு பாரக்குடி, மலப்பட்டி, ஆவூர், முக்கோண மலைப்பட்டி, ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளிலேயே வட்டமடித்துள்ளார். விமானத்தின் எரிபொருளைத் தீர்த்து, எடையைக் குறைக்கும் முயற்சியாகவும் விமானம் தரையிறங்கும்போது பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் வகையிலும் இத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்தார் விமானி. நிமிடத்திற்கு ஒருமுறை போன், வீடியோ கால் என பயணிகளுடன் தொடர்பிலேயே இருந்தாலும் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்ற பதற்றத்திலேயே இரண்டு மணி நேரமாக இருந்த உறவினர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், விமானியும் துணை விமானிகளும் சேர்ந்து, மிகச் சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கினர். விமானத்தில் இருந்து அனைவரும் இறங்கியதும் ஆரவாரமாக கைதட்டி ஓடி சென்று கட்டித்தழுவியும் முத்தமிட்டும் கண்ணீர் மல்கப் பயணிகளை வரவேற்றனர் உறவினர்களும் நண்பர்களும்.