பீகார் மாநில முதலமைச்சரான, நான்கே மாதங்களில் பதவியில் இருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் நிலையில், பீகாருக்கு புதிய முதலமைச்சர் வர உள்ளதாகவும் கூறி உள்ளார். ராஜ்யசபா தேர்தல் மாநிலங்களவை தேர்தலில், பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதில் ஒன்றில் நிதிஷ்குமாரும், மற்றொன்றில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூரும் போட்டியிட உள்ளனர். மாநிலங்களவைக்குப் போட்டியிட உள்ளதால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ளார். அடுத்த முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என்றும், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும், நிதிஷ் குமார் விரைவில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது. இதயப்பூர்வமான நன்றி - நிதிஷ் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாகத் தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மாநிலத்தில் அமைய உள்ள புதிய அரசுக்கு தனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவு;இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, என் மீது நம்பிக்கை வைத்து உங்கள் ஆதரவை, நீங்கள் அளித்து வருகிறீர்கள். இந்த வலிமை மூலம் தான், பீகாருக்கும் உங்கள் அனைவருக்கும் முழுமையான விசுவாசத்துடன், நாங்கள் சேவை செய்து வருகிறோம். உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவு காரணமாகவே, வளர்ச்சியுடன் கூடிய மரியாதையின் புதிய பரிமாணத்தைப் பீகார், இன்று பெற்றுள்ளது. இதற்காக நான், எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். ராஜ்யசபா செல்ல விரும்புகிறேன் எனது பொது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து, பீகார் மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே, இந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். பீகார் மாநில மக்கள் உடனான எனது இந்த உறவு, வரும் காலத்திலும் தொடரும், வளர்ச்சி அடைந்த பீகார் மாநிலத்தை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு, அசைக்க முடியாததாக இருக்கும் என்றும், மனதார உறுதி அளிக்கிறேன். பீகாரில் அமைய உள்ள புதிய அரசுக்கு எனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும்.இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். Related Link தமிழ்நாட்டின் ஆறு ராஜ்யசபா எம்பிக்கள் யார் யார்?