மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்த போஸ், திடீர் ராஜினாமா அதிர்ச்சி அளிப்பதாக முதல்வர் மம்தா பதிவிட்டுள்ளார். புதிய ஆளுநர் நியமனம் குறித்து உள்துறை அமைச்சகம், மரபுப்படி முறையாக தெரிவிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். ஆளுநர் ராஜினாமா மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக, கடந்த மூன்றரை ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த சிவி ஆனந்த போஸ், C. V.Ananda Bose மார்ச் 5ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த அதிரடி முடிவை அறிவித்தார். தனது ராஜினாமா குறித்துப் பேசிய அவர், ஆளுநர் மாளிகையில் தான் போதுமான காலத்தைச் செலவிட்டு விட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், பதவி விலகலுக்கான உரிய காரணத்தை, ஆனந்த போஸ் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. முதல்வர் கடும் அதிருப்திஆளுநரின் இந்த திடீர் ராஜினாமா குறித்து கருத்து கூறிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தான் மிகுந்த அதிர்ச்சி, கவலை அடைந்துள்ளதாக தெரிவித்தார். ஆளுநர் ராஜினாமா செய்ததற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. ஆனால், வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் கொடுத்த சில அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே அவர் பதவி விலகியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன் என்றும் மம்தா குற்றம் சாட்டினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என். ரவியை, மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக நியமித்துள்ளதாக, தன்னிடம் தெரிவித்ததாகவும் மம்தா பானர்ஜி கூறினார். தன்னிச்சையான முடிவுகள் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு;புதிய ஆளுநர் நியமனம் குறித்து வழக்கமான மரபுகளின்படி என்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் ஒரு தகவலாக மட்டுமே இதை என்னிடம் கூறினார். இத்தகைய தன்னிச்சையான முடிவுகள் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவையும், நமது கூட்டாட்சி தத்துவத்தின் அடித் தளத்தையும் சிதைக்கின்றன. மாநிலங்களின் கண்ணியத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Related Link 9 ஆளுநர்கள் அதிரடி மாற்றம் - ஜனாதிபதி உத்தரவு