இந்தியாவின் அரசியலிலும், பொருளாதாரத்திலும் நிலைத் தன்மை இருப்பதாகவும், 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாற உள்ளதாகவும் ஜப்பானில் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்திய - ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பேசியதாவது;இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளி. மெட்ரோ ரயில் முதல் உற்பத்தி வரை, ஒவ்வொரு துறையிலும் நமது கூட்டாண்மை பரஸ்பர நம்பிக்கையின் அடையாளம். ஜப்பானிய நிறுவனங்கள், இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 30 பில்லியன் டாலர் தனியார் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இன்று, இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை, கொள்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மை உள்ளது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. மிக விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறப்போகிறது. இந்தியாவில், 2017ஆம் ஆண்டு, ’ஒரே நாடு, ஒரே வரி’யை அறிமுகப்படுத்தினோம். இப்போது, பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வணிகத்திற்கான ஒற்றை டிஜிட்டல் சாளர ஒப்புதலை வழங்கியுள்ளோம்.இந்த சீர்திருத்தங்களுக்குப் பின்னால் வளர்ச்சி அடைந்த பாரதத்தை கட்டமைக்க வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாடு உள்ளது.இன்று, உலகம் இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை உலகம் அங்கீகரித்தது மட்டுமல்லாமல், பாராட்டவும் செய்துள்ளது.ஆட்டோமொபைல் துறையில் இந்தியா - ஜப்பான் கூட்டாண்மை மிகவும் வெற்றிகரமானது. வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், உலகத்திற்காக உற்பத்தி செய்யுங்கள்.ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்த முடியும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.